இந்தியா

காங்கிரஸ் தலைவா்களுக்கு தோல்வி பயம்: பசவராஜ் பொம்மை பேட்டி

Published On 2023-04-28 09:24 IST   |   Update On 2023-04-28 09:24:00 IST
  • காங்கிரஸ் தலைவர்கள் இன்னும் அதிகார போதையில் இருந்து வெளியே வரவில்லை.
  • கர்நாடகம் கலாசாரத்தை கொண்ட நாடு.

பெங்களூரு :

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஹாவேரியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நான் எனது தொகுதியில் அனைத்து கிராமங்களுக்கு சென்று மக்களின் ஆதரவை கேட்கிறேன். அதனால் என்னை மக்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பார்கள். தேசத்துரோகிகள், பயங்கரவாதிகள், அமைதியை சீர்குலைப்பவர்களுக்கு பிரதமர் மோடி சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். நாட்டின் பிரதமர் மோடியை விஷ பாம்புடன் ஒப்பிட்டு மல்லிகார்ஜுன கார்கே பேசியுள்ளார். காங்கிரஸ் கீழ்மட்டத்திற்கு இறங்கியுள்ளது.

காங்கிரஸ் தலைவர்கள் இன்னும் அதிகார போதையில் இருந்து வெளியே வரவில்லை. முன்பு இருந்த அதிகார போதையில் இருப்பது போலவே இப்போதும் பேசுகிறார்கள். கர்நாடகம் கலாசாரத்தை கொண்ட நாடு. அனைவரையும் கன்னடர்கள் மதிக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை நாங்கள் எதிர்த்தாலும், மூத்த தலைவர்கள் என்பதால் அவரை நாங்கள் மதிக்கிறோம்.

ஒரு அனுபவம் வாய்ந்த தலைவர் இவ்வாறு தரக்குறைவாக பேசலாமா?. பா.ஜனதா வெற்றி பெறும் என்பதால் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் விரக்தியில் உள்ளனர். அதனால் எங்கள் கட்சியின் உள்துறை மந்திரி அமித்ஷா மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர்களுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. சட்டப்படி என்ன நடைபெறுமோ அது நடக்கும். காங்கிரசாரின் புகாரில் உண்மை இல்லை. அந்த புகார் மனு நிராகரிக்கப்படும். காங்கிரஸ் கட்சி பண பலத்தை கொண்டு தேர்தலை எதிர்கொள்கிறது. முன்பு எங்கள் கட்சி தொண்டர்கள் பலர் அடி-உதை வாங்கியுள்ளனர். அவ்வாறு தற்போது நடைபெறக்கூடாது என்பதால் நாங்கள் முன்எச்சரிக்கையாக கட்சி நிர்வாகிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளோம்.

எங்களை பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் செய்கிறோம். ஒரு அரசியல் கட்சியாக நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்கிறோம். இதில் என்ன தவறு உள்ளது. தேர்தல் ஆணையம் தனது பணியை ஆற்றும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

Similar News