ஆன்லைனில் வாங்கிய ரூ.300 டி-சர்ட்.. நண்பனை கழுத்தறுத்து கொன்ற சகோதரர்கள் - பகீர் சம்பவம்
- அக்ஷய் என்பவர் ரூ.300 மதிப்புள்ள டி-சர்ட்டை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.
- இதில் அக்ஷயின் அண்ணனும் தலையிட்டு சுபம் உடன் வாக்குவாதம் செய்துள்ளார்
மகாராஷ்டிராவில், 300 ரூபாய் மதிப்புள்ள டி-சர்ட்டால் ஏற்பட்ட தகராறில், சகோதரர்கள் இருவர் தங்கள் நண்பரைக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
நாக்பூரில் உள்ள சாந்தி நகர் பகுதியில் வசித்து வரும் அக்ஷய் என்பவர் ரூ.300 மதிப்புள்ள டி-சர்ட்டை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.
ஆனால் அது தனக்கு பொருந்தவில்லை என கூறி தனது நண்பன் சுபம் -இடம் நேற்று முன் தினம் [ஞாயிற்றுக்கிழமை] விற்க முயன்றுள்ளார். ஆனால் ரூ. 300 கொடுத்து அதை சுபம் வாங்க மறுத்துள்ளார். இதனால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் அக்ஷயின் அண்ணனும் தலையிட்டு சுபம் உடன் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் டி-சர்ட்டுக்கான ரூ.300 பணத்தை அக்ஷய் மீது சுபம் தூக்கி வீசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அக்ஷய் மற்றும் அவரது அண்ணன் இருவரும் சேர்ந்து சுபம் உடைய கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.
சம்பவம் நடந்த நேரத்தில் இரண்டு சகோதரர்களும் குடிபோதையில் இருந்ததை காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மேலும், இருவருக்கும் குற்றப் பின்னணி இருப்பதாக ஒரு மூத்த அதிகாரி தெரிவித்தார். சகோதரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சுபமின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.