அரசு பள்ளியில் குழந்தைகள் பராமரித்த தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை திருடிச்சென்ற மர்மநபர்கள்
- குழந்தைகளின் காய்கறி தோட்டத்தில் பூத்திருந்த காலிபிளவர் மற்றும் முட்டைகோஸ் ஒன்று கூட செடியில் இல்லை.
- திருவனந்தபுரம் அருங்காட்சியக போலீஸ் நிலைய போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் தைக்காடு பகுதியில் அரசின் மாதிரி பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தைக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர்.
கொரோனா தொற்றுக்கு பிறகு இந்த பள்ளியில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டது. அதனை அந்த பள்ளியில் படித்து வரும் சிறு குழந்தைகள் பராமரித்து வந்தனர். குழந்தைகள் பராமரித்த அந்த தோட்டத்தில் பீட்ரூட், கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, காலிபிளவர், முட்டைகோஸ், பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்பட்டிருந்தன.
அவற்றுக்கு அந்த குழந்தைகள் தினமும் காலை மற்றும் மாலையில் தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தனர். அந்த காய்கறி தோட்டத்தை குழந்தைகள் மிகவும் ஆர்வமாக பராமரித்து வந்ததையடுத்து பள்ளிக்கு பின்புறத்தில் இருந்த அந்த காய்கறி தோட்டம், பள்ளியின் முன் பகுதிக்கு மாற்றப்பட்டது.
குழந்தைகள் தினமும் தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்த அந்த காய்கறி தோட்டம் பார்ப்பதற்கு மிகவும் பசுமையாக இருந்தது. இந்தநிலையில் அந்த காய்கறி தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த காலி பிளவர் செடியில் காலி பிளவர்கள் பூத்திருந்தது. அந்த காலிபிளவர் அறுவடை செய்ய தயாராக இருந்தது.
அவற்றை விளைவித்த குழந்தைகள் மூலமாக அறுவடை செய்யும் வகையில் ஆசிரியர்கள் திட்டமிட்டிருந்தனர். வார விடுமுறை முடிந்து நேற்றைய தினத்தில் காலி பிளவர்களை வெட்டலாம் என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில் விடுமுறை முடிந்து குழந்தைகள் நேற்று பள்ளிக்கு வந்தனர். அப்போது குழந்தைகளின் காய்கறி தோட்டத்தில் பூத்திருந்த காலிபிளவர் மற்றும் முட்டைகோஸ் ஒன்று கூட செடியில் இல்லை. இதனைப் பார்த்த பள்ளிக்கு வந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
யாரோ மர்மநபர்கள் குழந்தைகளின் காய்கறி தோட்டத்தில் இருந்த 30-க்கும் மேற்பட்ட காலி பிளவர்கள் மற்றும் முட்டைகோஸ்களை திருடிச் சென்றிருக்கின்றனர். தாங்கள் இவ்வளவு நாட்களாக தண்ணீர் ஊற்றி வளர்த்த காய்கறிகள் திருட்டு போனதை பார்த்த குழந்தைகள் கவலையடைந்தனர்.
அந்த பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளான ஸ்வேதா, அம்யா, ஆத்யா, சிவானந்தா, அக்ஷா ஆகியோர் ஒருவரையொருவர் கண்களில் கண்ணீருடன் பார்த்தபடி இருந்தனர். அவர்களை ஆசிரியர்கள் சமாதானப்படுத்தினர்.
குழந்தைகள் ஆர்வமாக வளர்த்த செடிகளில் முளைத்த காய்கறிகளை திருடியது யார்? என்று ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். இதனையறிந்த குழந்தைகளின் பெற்றோரும் கவலையடைந்தார்கள். இதுகுறித்து அந்த பள்ளியின் ஆசிரியை சுனிதா கூறியதாவது:-
காய்கறி தோட்டத்தை நர்சரி முதல் நான்காம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் மிகவும் ஆர்வமாக பராமரித்து வந்தனர். இந்த தோட்டத்தில் கடந்த வாரம் 5 காலிபிளவர்கள் திருட்டு போகின. ஆனால் அதனைப்பற்றி நாங்கள் கவலையடையவில்லை. ஆனால் திங்கட்கிழமை நாங்கள் கண்ட காட்சி குழந்தைகளுக்கு மட்டுமின்றி எங்களுக்கும் மிகுந்த வேதனையை அளித்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
குழந்தைகளின் தோட்டத்தில் காய்கறிகளை மர்மநபர்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் சென்றது. அதன்பேரில் திருவனந்தபுரம் அருங்காட்சியக போலீஸ் நிலைய போலீசார் அந்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.