இந்தியா
கலவர பூமியான நாக்பூரில் 6 நாட்களுக்கு பிறகு ஊரடங்கு நீக்கம்.. அமைதி திரும்பியதாக முதல்வர் அறிவிப்பு

கலவர பூமியான நாக்பூரில் 6 நாட்களுக்கு பிறகு ஊரடங்கு நீக்கம்.. அமைதி திரும்பியதாக முதல்வர் அறிவிப்பு

Published On 2025-03-23 20:21 IST   |   Update On 2025-03-23 20:21:00 IST
  • கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 35 போலீசார் காயம் அடைந்தனர்.
  • பதட்டமான பகுதிகளில் ரோந்துப் பணி தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள குல்தாபாத்தில் அமைந்துள்ள முகலாயப் மன்னர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் தலைமையிலான போராட்டங்களை நடத்தின.

அப்போது இஸ்லாமிய புனித எழுத்துக்கள் கொண்ட 'சதர்' துணி எரிக்கப்பட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், மத்திய நாக்பூர் பகுதிகளில் கடந்த திங்கள்கிழமை (மார்ச் 17) இரவு வன்முறை வெடித்தது.

குறிப்பாக மகால், ஹன்சாபுரி பகுதிகளில் போராட்டக்காரர்கள் பல வாகனங்களை தீவைத்து எரித்தனர். இதில், 42 வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின. கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 35 போலீசார் காயம் அடைந்தனர்.

இந்த வன்முறையைத் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவியதால் நாக்பூர் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நேற்றும் நேற்று முன்தினமும் சில பகுதிகளில் ஊரடங்கு நீக்கப்பட்டது.

இந்நிலையில் கலவரத்தின்பின் 6 நாட்களுக்கு பிறகு இன்று மதியம் 3 மணியளவில் மீதமுள்ள பகுதிகளிலும் ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. கலவரம் தொடர்பாக இதுவரை 100 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பதட்டமான பகுதிகளில் ரோந்துப் பணி தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பேசிய மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், நாக்பூரில் நிலைமை முற்றிலும் அமைதியாக உள்ளது. எங்கும் பதற்றம் இல்லை. அனைத்து மதத்தினரும் அமைதியாக வாழ்கிறார்கள். எனவே, ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார். முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நாகப்பூர் தொகுதி எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News