தாமதமான ரெயில்கள்.. தடுக்கப்பட்ட படிக்கட்டுகள் - டெல்லி ரெயில் நிலைய கூட்டநெரிசலுக்கு காரணம் என்ன?
- பிளாட்பார்ம் 12ல் காத்திருந்த கூட்டமும், வெளியே காத்திருந்த கூட்டமும் 16வது பிளாட்பார்மை நோக்கி சென்றது.
- ரெயில்வே ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1,500 பொது(UNRESERVED) டிக்கெட்டுகளை விற்றது
இழப்பீடு
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் செல்ல புறப்பட்ட மக்கள் நேற்று(சனிக்கிழமை) இரவு டெல்லி ரெயில் நிலையத்தில் கூட்டநெரிசலில் சிக்கினர்.
இதில் 3 குழந்தைகள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டநெரிசலுக்கு ரெயில்வே துறையின் தோல்வியே காரணம் என மக்களை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
'உயர்மட்ட' விசாரணை
இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பயணிகளின் திடீர் அதிகரிப்பு பீதியை ஏற்படுத்தியது என்று ரெயில்வே அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
இந்நிலையில் கூட்டநெரிசல் ஏற்பட ரெயில் நிலையத்தில் நிலவிய பல்வேறு குளறுபடிகளே காரணம் என சம்பவத்தை நெரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
தாமதமான ரெயில்கள்
மகா கும்பமேளாவிற்குச் செல்ல, ரெயில்களில் ஏற கூட்டம் கூடியிருந்தது. பிரயாக்ராஜ் செல்லும் ரெயில்கள் தாமதமாக வந்ததால் நிலைமை மோசமடைந்து கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்தது என்று கூறப்படுகிறது.
பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ், சுதந்திர சேனானி எக்ஸ்பிரஸ் மற்றும் புவனேஷ்வர் ராஜ்தானி தாமதமாக வந்தன. ரெயில்களில் ஏறுவதற்காக பயணிகள், 12,13, 14வது நடைமேடையில் கூடியிருந்தனர்.
ரெயில் நிலையத்தில் வேலை செய்யும் போர்ட்டர் (கூலி) ஒருவர் கூறுகையில், பிரயாக்ராஜ் சிறப்பு ரயில் 12வது பிளாட்பார்மில் இருந்து புறப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த ரெயில் 16வது பிளாட்பார்மிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
எனவே பிளாட்பார்ம் 12ல் காத்திருந்த கூட்டமும், வெளியே காத்திருந்த கூட்டமும் 16வது பிளாட்பார்மை நோக்கி சென்றது. மக்கள் ஒருவரை ஒருவர் மோதத் தொடங்கி எஸ்கலேட்டர் மற்றும் படிக்கட்டுகளில் விழுந்தனர். நான் 1981 முதல் கூலியாக வேலை செய்து வருகிறேன், ஆனால் இதுபோன்ற கூட்டத்தை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை என்று கூறினார்.
தடுக்கப்பட்ட படிக்கட்டுகள்:
கூட்டத்தை நிர்வகிக்க 14 மற்றும் 15வது பிளாட்பார்ம்களில் ஒரு படிக்கட்டு அடைக்கப்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ரயில் தாமதம் தொடர்ந்ததால், படிக்கட்டுகளில் அதிகமான பயணிகள் கூடத் தொடங்கினர்.
நெரிசல் அதிகமாகி, மக்கள் ரெயிலில் ஏறுவதற்காக படிக்கட்டுகளை நோக்கி முன்னே இருப்பவர்களை தள்ளினர். அந்தத் தள்ளுமுள்ளு காரணமாக பலர் கீழே விழுந்து நெரிசல் ஏற்பட்டது. நடைமேடையில் கூட்டம் அதிகரித்ததால் மற்றவர்கள் மூச்சுத் திணறினர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒரு மணி நேரத்துக்கு 1,500 பொது டிக்கெட்டுகள் விற்பனை:
ரெயில்வே தலைமை வணிக மேலாளர் கூற்றுப்படி, ரெயில்வே ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1,500 பொது(UNRESERVED) டிக்கெட்டுகளை விற்றது. இதனால் ரெயில் நிலையத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவு கூட்டம் காணப்பட்டது. நடைமேடை எண். 14 மற்றும் நடைமேடை எண். 16 அருகே உள்ள எஸ்கலேட்டர் அருகே கூட்ட நெரிசல் ஏற்பட்டது.