இந்தியா

மதிப்புமிக்க வாக்குகளை பதிவு செய்க- பிரதமர் மோடி

Published On 2025-02-05 07:46 IST   |   Update On 2025-02-05 07:46:00 IST
  • ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நடக்கிறது.
  • முதல்முறையாக வாக்களிக்க இருக்கும் அனைத்து இளம் நண்பர்களுக்கும் வாழ்த்து.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வருகிற 23-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. 70 தொகுதிகளிலும் மொத்தம் 699 பேர் போட்டியில் உள்ளனர். இதில் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நடக்கிறது.

டெல்லியின் முதல்-மந்திரி அதிஷி கல்காஜி தொகுதியிலும், முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் பர்வேஷ் வர்மாவும், காங்கிரஸ் சார்பில் சந்தீப் தீட்சித்தும் மோதுகிறார்கள். இவர்கள் 2 பேரும் முன்னாள் முதல்-மந்திரிகளின் மகன்கள் ஆவர். சந்தீப் தீட்சித், டெல்லியில் நீண்டகாலம் முதல்-மந்திரியாக இருந்த ஷீலா தீட்சித்தின் மகன் ஆவார்.

இதைப்போல கல்காஜி தொகுதியில் அதிஷியை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் ரமேஷ் பிதூரியும், காங்கிரஸ் சார்பில் அல்கா லம்பாவும் நிற்கிறார்கள். ஆம் ஆத்மியின் செல்வாக்கு மிக்க தலைவர்களை எதிர்த்து பா.ஜ.க.வும் வலுவாகவே போட்டியாளர்களை நிறுத்தி உள்ளது.

இந்நிலையில் டெல்லி சட்டசபைக்கான வாக்குப்பதிவு காலை தொடங்கியது. வாக்குப்பதிவு மாலை 6.30 மணி வரை நடைபெறுகிறது.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில்,

டெல்லி சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இங்குள்ள வாக்காளர்கள் இந்த ஜனநாயக திருவிழாவில் முழு ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது மதிப்புமிக்க வாக்குகளை பதிவு செய்யுங்கள்.

முதல்முறையாக வாக்களிக்க இருக்கும் அனைத்து இளம் நண்பர்களுக்கும் வாழ்த்து என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News