இந்தியா

ஆம் ஆத்மி வேட்பாளர்களை இழுக்க பாஜக பேரம் பேசியதாக கெஜ்ரிவால் குற்றச்சாட்டு: விசாரணைக்கு உத்தரவு

Published On 2025-02-07 15:03 IST   |   Update On 2025-02-07 16:10:00 IST
  • பாஜக-விடம் இருந்து 16 ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு அழைப்புகள் வந்துள்ளன.
  • கட்சி தாவினால் மந்திரி பதவி மற்றும் 15 கோடி ரூபாய் வழங்குவதாக பாஜக தெரிவித்துள்ளது.

டெல்லியில் நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. நாளை வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், பாஜக ஆட்சியை பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது. இதனால் 27 வருடங்களுக்கு பின் டெல்லியில் மீண்டும் பாஜக ஆட்சியை அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆம் ஆத்மி வேட்பாளர்களிடம், கட்சி தாவினால் 15 கோடி ரூபாய் தருகிறோம் என பாஜக கூறியதாக கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

"துஷ்பிரயோகம் செய்யும் கட்சி (பாஜக) தேர்தலில் 55-க்கும் அதிகமான இடங்களை பிடிக்கும் என சில கருத்து கணிப்பு ஏஜென்சிகள் தெரிவித்துள்ளன. பாஜக-விடம் இருந்து 16 ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு அழைப்புகள் வந்துள்ளன. கட்சி தாவினால் மந்திரி பதவி மற்றும் 15 கோடி ரூபாய் வழங்குவதாக பாஜக தெரிவித்துள்ளது" என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும், "அவர்கள் உண்மையில் 55 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவார்கள் என்றால், எங்களுடைய வேட்பாளர்களை ஏன் அழைக்க வேண்டும்?. ஆம் ஆத்மி வேட்பாளர்களை உடைப்பதற்கான சூழ்நிலையை உருவாக்குவதற்கான சதிதான் இந்த போலி கருத்து கணிப்பு. ஆனால் எங்களுடைய வேட்பாளர்கள் ஒருவர் கூட கட்சி தாவமாட்டார்கள்" என்றார்.

இந்த நிலையில் கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு விசாரணைக்கு தகுதியானது எனத் தெரிவித்த டெல்லி மாநில துணைநிலை ஆளுநர், இது தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Tags:    

Similar News