இந்தியா

எடியூரப்பா மீதான 'போக்சோ' வழக்கை ரத்து செய்ய மறுத்த உயர்நீதிமன்றம்.. முன்ஜாமீன் வழங்கி உத்தரவு

Published On 2025-02-07 17:04 IST   |   Update On 2025-02-07 17:04:00 IST
  • துரித நடவடிக்கை மேற்கொள்ள வழக்கு சிஐடிக்கு மாற்றப்பட்டது.
  • நீதிபதி எம். நாகபிரசன்னா முன் விசாரணைக்கு வந்தது.

பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கர்நாடகா மாநில முன்னாள் முதல்வருமான 81 வயதான எடியூரப்பா, தனது 17 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் ஒருவர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் புகார் அளித்தார்.

பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள அவரது வீட்டிற்கு உதவி கேட்டு சென்றபோது எடியூரப்பா தனது மகளை தனியறைக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் தனது புகாரில் தெரிவிதிவித்திருந்தார். 

அதன் அடிப்படையில் எடியூரப்பா மீது பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டப்பிரிவு 8, இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 354ஏ, 204, 214- இன்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக துரித நடவடிக்கை மேற்கொள்ள வழக்கு சிஐடிக்கு மாற்றப்பட்டது.

சிஐடி வேண்டுகோளின் பேரில் நீதிமன்றம், எடியூரப்பாவைக் கைது செய்ய ஜாமீனில் வெளியே வரமுடியாத ஆணை பிறப்பித்தது. இதனிடையே, தன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்யக் கோரி கா்நாடக உயர்நீதிமன்றத்தில் எடியூரப்பா மனுதாக்கல் செய்திருந்தார்.

எடியூரப்பாவின் மனு இன்று கா்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி எம். நாகபிரசன்னா முன் விசாரணைக்கு வந்தது. 

எடியூரப்பா மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய முடியாது என்று நீதிபதி தெரிவித்தார். இருப்பினும் கைது நடவடிக்கையில் இருந்து தற்காத்துக்கொள்ள எடியூரப்பாவுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். கடந்த மே மாதம் புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் மூச்சுத்திணறலால் உயிரிழந்தது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News