இந்தியா

வலுக்கட்டாயமாக கடனை வசூலித்தால் 10 ஆண்டு சிறை: கர்நாடக அரசின் அவசர சட்டத்தை நிராகரித்தார் ஆளுநர்

Published On 2025-02-07 20:35 IST   |   Update On 2025-02-07 20:35:00 IST
  • வலுக்கட்டாயமாக கடனை திருப்பி கேட்டால் 10 ஆண்டு சிறை, ரூ. 5 லட்சம் அபராதம்.
  • நிலுவையில் உள்ள கடன் வட்டியுடன் தள்ளுபடி செய்யப்படும்.

வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனத்திடம் அவசர தேவை, விவசாயம் உள்ளிட்ட தொழில்களுக்காக கடன் பெற்றவர்கள் அந்த கடனை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கட்ட முடியவில்லை என்றால், வட்டிமேல் வட்டி விதிக்கப்படுகிறது.

ஒரு கட்டத்திற்கு மேல் கடன் பெற்றவர்களை தொடர்பு கொண்டு, கடனை உடனடியாக திருப்பி செலுத்தும்படி நிறுவனத்தால் வற்புறுத்தப்படுவார்கள். இதனால் கடன் பெற்றவர்கள் நிறுவனம் கொடுக்கும் நெருக்கடியை தாங்க முடியாமல் தற்கொலை செய்யக்கூடிய அளவிற்கு செல்லும் நிலை ஏற்படும் சூழ்நிலை உருவாகும். ஒரு கட்டத்தில் தற்கொலை கூட செய்து கொள்கிறார்கள்.

இப்படி நாடு முழுவதும் பல்வேறு சம்பங்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக கிரெடிட் கார்டு மற்றும் கடன் வழங்கும் செயலிகள் வலுக்கட்டாயமாக கடனை வசூலிப்பதால், கடன் பெற்றவர்கள் விபரீத முடிவை எடுக்கும் சூழ்நிலை உருவாகிறது.

இதற்கு முடிவு கட்ட கர்நாடக அரசு, சிறுகடன் சட்டத்தில் (MicoFinance) கட்டாய நடவடிக்கைகளை தடுத்தல் (Prevention of Coercive Actions) என்ற திருத்தத்தை கொண்டு வந்தது. இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அத்துடன் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடன் கொடுத்தவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகும் எனக் கூறி அவசர சட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்க மறுத்துள்ளார்.

இந்த அவசர சட்டம் தொடர்பாக கவர்னர் கூறியதாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அவசர சட்டத்தில் வட்டி உள்பட அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என அரசு பரிந்துரை செய்துள்ளது. இந்த அவசர சட்டம் நடைமுறைக்கு வந்தால், கடன் பெற்றவர்களுக்கு எதிராக சிவில் நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

ஆனால், நிலுவையில் உள்ள அனைத்து கடன்களும் வட்டியுடன் தள்ளுபடி செய்யப்பட்டால், நியாயமான வகையில் கடன் கொடுத்தவர்கள் சிக்கலை எதிர்கொள்ள நேரி்டலாம். மேலும், நிலுவையில் உள்ள தொகையை மீட்டெடுக்க அவர்களிடம் எந்த தீர்வும் இல்லை.

இயற்கை நீதியின் ஒரு கோட்பாடாக, ஒவ்வொரு நபரும் தனது உரிமைகளுக்காகவும் சட்டப்பூர்வ தீர்வுகளுக்காகவும் போராட உரிமை உண்டு. எந்தவொரு நபரும் தனது உரிமைகளுக்காகப் போராடுவதைத் தடுப்பது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 19 & 32-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு வழிவகுக்கும். இது அரசாங்க வங்கிகளே பின்பற்றும் கடன் கொள்கைகளுக்கு எதிரானது.

சமூகத்தின் கீழ்மட்ட மக்களை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும் சுயஉதவிக் குழுக்களைப் பாதிப்பதன் மூலம், இந்த அவசர சட்டம் மாநிலத்தின் வணிக வாய்ப்புகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

இவ்வாறு கவர்னர் மாளிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொடுத்த கடனை திருப்பி பெறுவதற்காக, கடன் பெற்றவர்களை வற்புறுத்தினால் 10 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அவசர சட்டத்தில் கூறப்பட்டிருந்தது.

Tags:    

Similar News