கடும் மூடுபனி- டெல்லியில் ரெயில் மற்றும் விமான சேவையில் பாதிப்பு
- டெல்லி விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா உள்ளிட்ட பல விமான நிறுவனங்களின் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளன.
- டெல்லியில் இருந்து புறப்படும் மற்றும் வரும் ரெயில்களும் தாமதமாக இயக்கப்படுகின்றன.
டெல்லியில் கடந்த சில நாட்களாகவே காலநிலையில் தொடர்ந்து மாறுபாடுகள் காணப்படுகின்றன. கடும் பனி காரணமாக சாலைகள், கட்டிடங்கள் தெரியாத நிலை காணப்பட்டது.
இந்நிலையில் இன்றும் அங்கு கடும் பனிமூட்டம் நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்சம் 7.6 ஆகவும் பதிவாகி இருக்கிறது.
டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்தில் காலை 8 மணியளவில் 0 மீ தெரிவுநிலையையும், டெல்லியில் உள்ள சப்தர்ஜங் விமான நிலையம் 50 மீட்டர் தெரிவுநிலையையும் தெரிவித்தது. இரண்டு விமான நிலையங்களும் வணிக விமான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவில்லை.
லோதி சாலை நிலையத்தில் காற்றின் தரக்குறியீடு 309 ஆக உள்ளது, இது மிகவும் மோசமானது என வகைப்படுத்தப்பட்டுள்ளது
டெல்லி விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா உள்ளிட்ட பல விமான நிறுவனங்களின் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளன.
மோசமான வானிலை காரணமாக அமிர்தசரஸ் மற்றும் கவுகாத்திக்கு வரும் மற்றும் செல்லும் அனைத்து விமானங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ள நிலையில், இண்டிகோ டெல்லி, அமிர்தசரஸ், லக்னோ, பெங்களூரு மற்றும் கவுகாத்தி வழித்தடங்களில் பயன்படுத்த ஆலோசனையை வழங்கி உள்ளது.
பயணிகளை தங்கள் பயணத்தைத் திட்டமிடும்போது விமான அட்டவணையைச் சரிபார்க்குமாறு விமான நிறுவனங்கள் கேட்டுக் கொண்டன. அதே நேரத்தில் மோசமாக வானிலை காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து புறப்படும் மற்றும் வரும் ரெயில்களும் தாமதமாக இயக்கப்படுகின்றன. சில வழித்தடங்களில் மாற்றப்பட்ட நேரத்துடன் இயக்கப்படுகிறது.
வானிலை காரணங்களால் டெல்லியில் இருந்து புறப்படும் குறைந்தது 24 ரெயில்கள் தாமதமாக வந்தன. பாதிக்கப்பட்ட ரெயில்களில், அயோத்தி எக்ஸ்பிரஸ் நான்கு மணி நேரம் தாமதமானது, கோரக்தாம் எக்ஸ்பிரஸ் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக இயக்கப்பட்டது, பீகார் கிராந்தி எக்ஸ்பிரஸ் மற்றும் ஷ்ரம் சக்தி எக்ஸ்பிரஸ் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக வந்தன.
டெல்லியில் ஜனவரி 8-ந்தேதி வரை பனிமூட்டம் காணப்படும் என்றும், ஜனவரி 6-ந்தேதி லேசான மழை பெய்யும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடும் குளிரால் தவிக்கும் மக்கள், ஆங்காங்கே தீ மூட்டி குளிர்காய்ந்து பனியின் தாக்கத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்கின்றனர்.