null
நிர்வாண வீடியோக்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியதால் பெண் என்ஜினீயர் தற்கொலை
- தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூர்:
பெங்களூர் எச்.ஏ.எல். போலீஸ் எல்லைக்குட்பட்ட தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தவர் பெண் என்ஜினீயர் (வயது 24). இவர் கடந்த 6 ஆண்டுகளாக திருமலஷெட்டிஹள்ளியில் உள்ள தனது தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வந்தார். தனது ஓய்வு நேரத்தை தனது மாமா பிரவீன் குடும்பத்துடன் கே.ஆர்.புரத்தில் உள்ள குடியிருப்பில் செலவிடுவது வழக்கம்.
இந்த நிலையில் பெண் என்ஜினீயர் கடந்த 12-ந்தேதி குண்டலஹள்ளி மெட்ரோல் நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்றார். அங்குள்ள அறையில் திடீரென்று உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். ஓட்டல் ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பெண் என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து தாய் கதறி அழுதார்.
அப்போது பெண் என்ஜினீயரின் நண்பர் அவரது தாயாரை சந்தித்து, பெண் என்ஜினீயரின் மாமா பிரவீன் செல்போனிலும், பென் டிரைவிலும் சேமித்து வைக்கப்பட்டிருந்த தனது நிர்வாண புகைப்படங்களை கொண்டு துன்புறுத்துவதாகவும், இதனால் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் பெண் என்ஜினீயர் தெரிவித்தார். அத்தகைய நடவடிக்கையை எடுக்க வேண்டாம் என நான் அறிவுரை வழங்கினேன். மேலும் அவர் இந்த பிரச்சனையை தனது பெற்றோருக்கு தெரிவித்து தீர்வு காணுமாறு என்னிடம் கூறினார் என்ற திடுக்கிடும் தகவலை பெண் என்ஜினீயர் தாயாரிடம் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பெண் என்ஜினீயரின் தாய் இதுகுறித்து எச்.ஏ.எல். போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பெண் என்ஜினீயர் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பிரவீன் ரகசியமாக எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை காண்பித்து உல்லாசத்துக்கு மறுத்தால் இணையதளத்தில் வெளியிடுவதாக பெண்ணை பிரவீன் துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் அவருடன் பழகுவதை தவிர்த்து, வேறொரு வாலிபருடன் பெண் என்ஜினீயர் பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரவீன், ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி உள்ளார்.
சம்பவத்தன்று பிரவீன், அவரை ஓட்டல் அறைக்கு வருமாறு அழைத்துள்ளார். இதனால் மனம் உடைந்த பெண் பிரவீன் தங்கி இருந்த ஓட்டலுக்கு சென்று தீக்குளித்து தற்கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீனை கைது செய்தனர். அவரது செல்போன் மற்றும் பென் டிரைவ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான பிரவீனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.