இந்தியா

உணவு பற்றாக்குறையால் நிறுத்தப்பட்ட திருமணம்... கடைசியில் நடந்த Twist

Published On 2025-02-04 09:59 IST   |   Update On 2025-02-04 09:59:00 IST
  • சூரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றது.
  • மீண்டும் திருமண மண்டபத்துக்கு சென்று திருமணம் நடந்தால் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என போலீசார் கருதினர்.

திருமணங்கள் இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சயிக்கப்பட்டு விமரிசையாக நடைபெறும் போது சில நேரங்களில் அற்ப காரணங்களுக்காக மணமக்களின் வீட்டாரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கடைசி நேரத்தில் திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. அதே போன்ற ஒரு சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது.

பீகாரை சேர்ந்த ராகுல் பிரமோத் மற்றும் குஜராத்தை சேர்ந்த அஞ்சலி குமாரிக்கு சூரத்தில் வைத்து திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடந்தது. இதற்காக சூரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றது. பெரும்பாலான சடங்குகள் நிறைவடைந்து மணமக்கள் மாலை மாற்றுவது மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் திடீரென மணமகனின் குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்தினர்.

விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறி மணமகனின் குடும்பத்தினர் வாக்குவாதம் செய்ததால் திருமணம் நிறுத்தப்பட்டது. இதனால் மணமகளின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பிரச்சனை போலீஸ் நிலையம் சென்றது. போலீசார் விசாரித்து பிரச்சனையை தீர்த்து வைத்தனர். ஆனாலும் மீண்டும் திருமண மண்டபத்துக்கு சென்று திருமணம் நடந்தால் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என போலீசார் கருதினர்.

இதையடுத்து மணமக்களை போலீஸ் நிலையத்துக்கே வரவழைத்து அங்கு இரு வீட்டார் முன்னிலையில் மாலை மாற்றி திருமணம் செய்து வைத்தனர். வழக்கமாக குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதால் காதல் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேறி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்து திருமணம் செய்து கொள்ளும் நிலையில் இந்த சம்பவம் இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.

Tags:    

Similar News