பெங்களூரு குண்டு வெடிப்பில் காயமடைந்தோர் சிகிச்சை செலவை அரசு ஏற்கும்: முதல்வர் சித்தராமையா
- தொப்பி வைத்து, மாஸ்க் அணிந்து பேருந்தில் வந்த நபர், டைமர் செட் செய்து வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார்
- இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கான அனைத்து செலவையும் காங்கிரஸ் அரசு ஏற்கும்
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நேற்று (மார்ச் 1) குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்பில் 9 பேர் காயம் அடைந்துள்ளனர். கர்நாடகா காவல்துறையினர் உபா மற்றும் வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தடயவியல் நிபுணர்கள், வெடி குண்டுகளை செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து வருகிறார்கள்.
குண்டு வெடிப்பில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்த பின் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அதில், "தொப்பி வைத்து, மாஸ்க் அணிந்து பேருந்தில் வந்த நபர், டைமர் செட் செய்து வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார். துணை முதல்வர், உள்துறை அமைச்சர் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றனர்.
மங்களூரு டிபன் பாக்ஸ் வெடிகுண்டு சம்பவத்திற்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு கிடையாது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ஒருவர? கும்பலா? என தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணைக் குழு அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாஜக ஆட்சியின் போதும் இதுபோன்ற குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளது, ஆகவே பாஜக இதை அரசியலாக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களின் சிகிச்சைக்கான அனைத்து செலவையும் காங்கிரஸ் அரசு ஏற்கும் என்றும் அவர் அறிவித்தார்.