இந்தியா

ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் 29-ந்தேதி விண்ணில் ஏவ தயார்- இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

Published On 2025-01-27 08:03 IST   |   Update On 2025-01-27 08:03:00 IST
  • என்.வி.எஸ்-02 செயற்கைக்கோள் இஸ்ரோவின் கீழ் செயல்படும் யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் தயாரிக்கப்பட்டது.
  • ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 25 மணி நேர கவுண்ட்டவுன் நாளை காலை 5.23 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது 100-வது செயற்கைக்கோளை ஏவுவதன் மூலம் வரலாறு படைக்க தயாராகி வருகிறது. இந்த மைல்கல் பணி 29-ந்தேதி அதாவது நாளை மறுதினம் (புதன்கிழமை) காலை 6.23 மணிக்கு, ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-02 என்ற வழிசெலுத்தும் செயற்கைக்கோள் புவி ஒத்திசைவான பரிமாற்ற சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட உள்ளது.

இந்த சாதனை விண்வெளி ஆய்வு மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு ஒரு குறிப்பிடத்தக்க படியை உயர்த்துகிறது. இது நாட்டில் வளர்ந்து வரும் விண்வெளி திறன்களை வலுப்படுத்துகிறது.

வழிசெலுத்தும் என்.வி.எஸ்-02 செயற்கைக்கோள் இஸ்ரோவின் கீழ் செயல்படும் யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் தயாரிக்கப்பட்டது. அத்துடன், இஸ்ரோவிற்குள் உள்ள பிற செயற்கைக்கோள் பணி மையங்களின் ஆதரவுடன் வடிவமைக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டு முயற்சி, செயற்கைக்கோள் மேம்பாடு மற்றும் ஒருங்கிணைப்பில் இஸ்ரோவின் விரிவான உள்நாட்டில் நிபுணத்துவத்தையும், நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யும். மேம்பட்ட விண்வெளி தொழில்நுட்பத்தை தயாரித்து பயன்படுத்துவதற்கான நிறுவனத்தின் திறனையும் இது எடுத்துக்காட்டுகிறது.

இந்த ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 25 மணி நேர கவுண்ட்டவுன் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 5.23 மணிக்கு தொடங்குகிறது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ராக்கெட் விண்ணில் ஏவ தயார் நிலையில் உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

Tags:    

Similar News