சபரிமலையில் தொடர்மழை- பக்தர்கள் வருகை குறைந்தது
- சபரிமலை பகுதியில் இன்று 3-வது நாளாக மழை பெய்தது.
- சபரிமலையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நடந்துவருவதை முன்னிட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சபரிமலையில் மழை பெய்தது.
இருந்தபோதிலும் மழையை பொருட்படுத்தாமல் யாத்திரை மேற்கொண்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கடந்த 2 நாட்களாக கனமழை மற்றும் மூடு பனியை பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் மழை கோர்ட்டு அணிந்தபடி வந்து சாமி தரிசனம் செய்தார்கள்.
இந்தநிலையில் சபரிமலை பகுதியில் இன்று 3-வது நாளாக மழை பெய்தது. மேலும் அருகில் உள்ள வர்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டமும் பயங்கரமாக இருந்தது. இருந்தபோதிலும் ஏராளமான பக்தர்கள் இன்று சபரிமலைக்கு வந்தனர்.
ஆனால் மற்ற நாட்களை விட குறைந்த அளவிலேயே பக்தர்கள் வருகை இருந்தது. சபரிமலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதே பக்தர்கள் வருகை குறைவாக இருப்பதற்கு காரணம் என்று கூறுப்படுகிறது. பக்தர்கள் வருகை குறைவாக இருந்ததால் சன்னிதானம் உள்ளிட்ட எங்கும் நெரிசல் இல்லை.
வலிய நடைப்பந்தலில் அதிகாலை கோவில் நடை திறந்ததில் இருந்து, சில மணி நேரம் பக்தர்கள் வரிசையில் காத்து நின்றனர். அதன்பிறகு பக்தர்கள் வெகுநேரம் காத்திருக்காமல் பதினெட்டாம் படி ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.
மழை ஓரளவுக்கு குறைந் திருப்பதால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு எதுவும் இல்லை. இதனால் அங்கு குளிக்க தடை எதுவும் விதிக்கப்படவில்லை.
சபரிமலையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இருந்தபோதிலும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வந்தபடி இருக்கின்றனர். தினமும் எரிக்கப்படும் 15,400 கிலோ குப்பையில், 3,500 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.