இந்தியா (National)

கேரளாவில் கொட்டித்தீர்த்த கனமழை- மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Published On 2024-06-28 02:12 GMT   |   Update On 2024-06-28 08:42 GMT
  • சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
  • கடலும் பயங்கர சீற்றத்துடன் காணப்பட்டது. ராட்சத அலைகள் எழும்பி ஆர்ப்பரித்தன.

திருவனந்தபுரம்:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, வயநாடு, திருச்சூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.

கோழிக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்தது. இந்த மழை நேற்றும் நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. கடலும் பயங்கர சீற்றத்துடன் காணப்பட்டது. ராட்சத அலைகள் எழும்பி ஆர்ப்பரித்தன.

கடல்நீரால் சாலையில் அரிப்பு ஏற்பட்டு கப்பாடு, கொயிலாண்டி கடல் எல்லை சாலைகள் தகர்ந்தன. இதனால் அந்த வழியாக போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. துவப்பரா பகுதியிலும் சாலை கடல்நீரில் அடித்துச் செல்லப்பட்டது. கோட்டயம் நகரின் மேற்கு பகுதியில் பாமரச்சால், திருவார்ப்பு, குமரகம் பகுதிகளில் பல இடங்களிலும் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.

இடுக்கி பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News