இந்தியா

பொய் தரவுகள் என்பதா? கங்கையில் நீராடினாலும் பாவிகளாகவே இருப்பார்கள்- அகிலேஷை மறைமுகமாக சாடிய இமாச்சல் ஆளுநர்

Published On 2025-01-18 12:23 IST   |   Update On 2025-01-18 12:23:00 IST
  • பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் சீனாவின் கணக்கீடு சரியாக இருக்கும் என கருதுகிறார்கள்.
  • ஆனால் இந்தியாவில் கணக்கீடு என்று வரும்போது, தவறாக காண்பிக்கப்படுகிறது என உணர்கிறார்கள்.

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா மகா கும்பமேளா.

45 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுமார் 40 கோடி பேர் கலந்து கொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12-ம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறும்.

தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். பிரயாக்ராஜ் வருவதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரெயில்கள் விடப்பட்டுள்ளன. முதல் நாளில் மட்டும் ஒரு கோடிக்கு மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினர் என உத்தர பிரதேச மாநில அரசு தெரிவித்திருந்தது.

ஆனால் உத்தர பிரதேச எதிர்க்கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ், அரசு அளிக்கும் தரவுகள் அனைத்தும் போலியானது. பிரயாக்ராஜ் வரும் ரெயில்கள் காலியாக வருகிறது என்பதை எங்களால் கேட்க முடிகிறது எனக் கூறியிருந்தார்.

இதற்கு பாஜ.க. தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். அகிலேஷ் யாதவ் சான்றிதழ் எங்களுக்கு தேவையில்லை என பதில் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் கருத்து வெளியிட்டவர்கள் கங்கையில் புனித நீராடினாலும் பாவிகளாக இருப்பார்கள் என இமாச்சல பிரதேச ஆளுநர் ஷிவ் பிரகாஷ் சுக்கலா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஷிவ் பிரகாஷ் சுக்லா கூறியதாவது:-

பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் சீனாவால் அளிக்கப்படும் கணக்கு சரியாக இருக்கும் என கருதுகிறார்கள். ஆனால் இந்தியாவில் கணக்கீடு என்று வரும்போது, தவறாக காண்பிக்கப்படுகிறது என உணர்கிறார்கள். மக்களை போன்று இதுபோன்ற கருத்துகளை வெளியிடுபவர்கள் பாவங்களை கழுவ கும்பமேளா சென்று கொண்டிருக்கிறார்கள்.

கும்பமேளா செல்வதால் மக்கள் பாவத்தில் இருந்து விடுபடுவார்கள். ஆனால் கருத்து தெரிவித்தவர்கள் பாவிகளாகவே இருப்பார்கள்.

இவ்வாறு ஷிவ் பிரகாஷ் சுக்லா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News