பீகாரில் பயங்கரம்- மருத்துவமனையின் பெண் இயக்குனரை சுட்டுக்கொன்ற மர்ம கும்பல்
- சுரபி ராஜை சுட்டுக்கொன்ற கும்பல் நோயாளிகளின் உறவினர்கள் போல உள்ளே வந்ததால் யாருக்கும் எந்த சந்தேகமும் எழவில்லை.
- பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள அகம்குவான் பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையின் இயக்குனராக சுரபி ராஜ் (வயது 33) இருந்தார். நேற்று அவர் மருத்துவமனையில் உள்ள தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தார்.
அப்போது நோயாளியின் உறவினர்கள் போல வந்த ஒரு கும்பல் திடீரென சுரபி ராஜ் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் சுரபி ராஜ் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து விழுந்தார். உடனே கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.
சத்தம் கேட்டு மருத்துவமனை ஊழியர்கள் சுரபி ராஜின் அறைக்கு சென்றபோது அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அவரது கைகள், முகம் மற்றும் மார்பு பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்கள் இருந்தன. உடனே அவரை மீட்டு பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
கொலை குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீஸ் அதிகாரிகள் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் இருந்து 6 தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சுரபி ராஜை சுட்டுக்கொன்ற கும்பல் நோயாளிகளின் உறவினர்கள் போல உள்ளே வந்ததால் யாருக்கும் எந்த சந்தேகமும் எழவில்லை. அதே போல துப்பாக்கி சூடு நடந்த போதும் பெரிய அளவில் சத்தம் எதுவும் கேட்கவில்லை என ஊழியர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமெரா காட்சி பதிவுகளை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுரபி ராஜ் பற்றி நன்கு அறிந்தவர்களே இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அவருக்கு யாருடனாவது முன்விரோதம் இருந்ததா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.