நான் கடவுள் கிடையாது.. மனிதன் தான் - பிரதமர் மோடி
- விரைவில் இந்த நிகழ்ச்சி வீடியோ வெளியாக உள்ள நிலையில் அதன் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
- எக்ஸ்- இல் இந்த டிரெய்லரைப் பகிர்ந்த பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.
முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி போட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.
Zerodha இணை நிறுவனர் நிகில் காமத் தொகுத்து வழங்கும் இந்த பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்கள் குறித்து மோடி மனம் திறந்துள்ளார்.
விரைவில் இந்த நிகழ்ச்சி வீடியோ வெளியாக உள்ள நிலையில் அதன் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 2 நிமிடம், 13 வினாடிகள் ஓடும் அந்த டிரெய்லரில், பிரதமர் பதவியின் கடமைகள் முதல் சர்வதேச பிரச்சனைகள் வரை மோடி பேசியுள்ளார்.
அதில் தான் குஜராத் முதலமைச்சராக இருந்த காலக்கட்டத்தை நினைவுகூர்ந்த மோடி, தவறுகள் தவிர்க்க முடியாதவை. நானும் நிறைய தவறுகள் செய்திருக்கலாம். நானும் ஒரு மனிதன்தான், கடவுள் அல்ல. என்று பேசியிருக்கிறார்.
டிரெய்லர் தொடக்கத்தில் காமத், நான் இங்கே உங்கள் முன் அமர்ந்து பேசுகிறேன்; நான் பதட்டமாக உணர்கிறேன். இது எனக்கு கடினமான உரையாடல் என்று கூறுகிறார். இதற்கு புன்னகையுடன் பதிலளித்த பிரதமர் மோடி, இது எனது முதல் பாட்காஸ்ட். இது உங்கள் பார்வையாளர்களிடம் எப்படி செல்லும் என்று எனக்குத் தெரியவில்லை என்று கூறுகிறார்.
எக்ஸ்- இல் இந்த டிரெய்லரைப் பகிர்ந்த பிரதமர் மோடி, நாங்கள் உங்களுக்காக இதை உருவாக்கி மகிழ்ந்ததைப் போல நீங்கள் அனைவரும் இதை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக மக்களவை தேர்தலின்போது தான் எல்லோரையும் போல பயாலஜிகளாக பிறந்திருக்க வாய்ப்பில்லை என்றும், கடவுளால் நேரடியாக அனுப்பப்பட்டவன் என்றும் மோடி பேசியது குறிப்பிடத்தக்கது.