ஒரு வருடமாக செவி சாய்க்காத மத்திய அரசு.. போராட்டக் களத்தில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை
- விஷம் குடித்த அவரை சக விவசாயிகள் பாட்டியாலா ராஜிந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
- டிசம்பர் 18 அன்று, மற்றொரு விவசாயி ரஞ்சோத் சிங் அதே போராட்ட தளத்தில் [ஷம்பு எல்லையில்] தற்கொலை செய்து கொண்டார்.
பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களுக்கு இடையேயான ஷம்பு மற்றும் கனௌரி எல்லைகளில் விவசாயிகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் அவர்களை தலைநகர் டெல்லிக்குள் நுழைய விடாமல் போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஷம்பு எல்லையில் போராட்டம் நடத்தி வந்த விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது கடந்த மூன்று வாரங்களில் அதே இடத்தில் நடந்த இரண்டாவது தற்கொலை.
பஞ்சாபின் டர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள பஹுவிந்தைச் சேர்ந்த ரேஷம் சிங் ஒரு வருட கால போராட்டத்துக்கு மத்திய அரசு செவி சாய்க்காத நிலையில் நேற்று விபரீத முடிவை எடுத்துளளார். விஷம் குடித்த அவரை சக விவசாயிகள் பாட்டியாலா ராஜிந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அங்கு அவர் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் மோர்ச்சா மற்றும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா ஒருங்கிணைப்பாளர் சர்வான் சிங் பந்தேர் கூறுகையில், விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாததால் அவர் விரக்தியில் இந்த முடிவை எடுத்துள்ளார்.
ரேஷம் சிங்கின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடும் , உறவினர்களுக்கு வேலை வாய்ப்பும், விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்தும் அரசு அறிவிக்கும்வரை அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறாது. இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை விவசாயியின் உடல் பிணவறையில் தான் இருக்கும் என்று தெரிவித்தார்.
முன்னதாக டிசம்பர் 18 அன்று, மற்றொரு விவசாயி ரஞ்சோத் சிங் அதே போராட்ட தளத்தில் [ஷம்பு எல்லையில்] தற்கொலை செய்து கொண்டார்.
மற்றொருபுறம் விவசாயி தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால்[70 வயது], நவம்பர் 26 முதல் பஞ்சாப் மற்றும் ஹரியானா இடையேயான கானௌரி எல்லைப் பகுதியில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவரது போராட்டம் 46 வது நாளை எட்டியுள்ள நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்து வருகிறது. இதற்கிடையே குடியரசு தினத்தன்று விவசாயிகள் நாடு முழுவதும் டிராக்டர் பேரணியை அறிவித்துள்ளனர்.