போலி வாக்காளர்கள் சேர்ப்பு குற்றச்சாட்டு: கெஜ்ரிவால் வீடு அருகே பாஜக-வினர் போராட்டம்
- நியூ டெல்லி தொகுதியில் 13 ஆயிரம் புதிய வாக்காளர்களை சேர்க்க விண்ணப்பம்.
- உத்தர பிரதேசம், பீகாரில் இருந்து வந்தவர்கள் மூலம் போலியாக சேர்க்க முயற்சி என கெஜ்ரிவால் குற்றச்சாட்டு.
டெல்லியில் அடுத்த மாதம் 5-ந்தேதி 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் புது டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் பர்வேஷ் வர்மா போட்டியிடுகிறார்.
நியூடெல்லி தொகுதியில் தன்னை தோற்கடிப்பதற்காக 13 ஆயிரம் புதிய வாக்காளர்களுக்கான விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது டிசம்பர் 15 முதல் ஜனவரி 8 வரை நடைபெற்றுள்ளது. இவர்கள் அனைவரும் உத்தர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என கெஜ்ரிவால் குற்றம் சாட்டியதுடன், தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் கெஜ்ரிவால் புகாரை கண்டித்து பாஜக-வைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டு அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்களை தடுப்பதற்கான போலீசார் தடுப்புகள் அமைத்திருந்தனர். போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறு கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட முயன்றனர். இதனால் போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்து அவர்களை விரட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.