இந்தியா

பாகிஸ்தானுடன் இனி நேரடி பேச்சுவார்த்தை கிடையாது- வெளியுறவு மந்திரி திட்டவட்டம்

Published On 2024-08-31 04:32 GMT   |   Update On 2024-08-31 04:32 GMT
  • சீனாவைப் பொறுத்தவரை, உங்களுக்கு இரட்டை புதிர் உள்ளது.
  • நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் நாங்கள் அமைதியாக இருப்பவர்கள் அல்ல.

புதுடெல்லி:

இந்திய வெளியுறவு கொள்கைகள் தொடர்பாக முன்னாள் தூதர் ராஜீவ் சிக்ரி எழுதியுள்ள புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவு குறித்து வெளிப்படையாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உலகின் எந்த நாட்டிற்கும், அண்டை நாடுகள் எப்போதும் ஒரு புதிராகவும், அதே வேளையில் பெரிய சக்திகளாகவும் விளங்குகின்றன.

சீனாவைப் பொறுத்தவரை, உங்களுக்கு இரட்டை புதிர் உள்ளது. ஏனெனில் அது ஒரு அண்டை நாடு மற்றும் ஒரு பெரிய சக்தி. எனவே, சீனாவுடனான சவால்கள் இந்த இரட்டை வரையறைக்கு பொருந்தும்.

பாகிஸ்தானுடனான இடைவிடாத பேச்சுவார்த்தையின் சகாப்தம் முடிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். பாகிஸ்தானின் செயல்களுக்கு விளைவுகள் உண்டு. காஷ்மீரைப் பொறுத்தவரை, சட்டப்பிரிவு 370 நிறைவேற்றப்பட்டுவிட்டது. அதில் மாற்றமில்லை. எனவே, பாகிஸ்தானுடன் என்ன வகையான உறவைப் பற்றி சிந்திக்கலாம் என்பதுதான் இன்றைய பிரச்சினை.

நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் நாங்கள் அமைதியாக இருப்பவர்கள் அல்ல. நிகழ்வுகள் நேர்மறையாக இருந்தாலும் எதிர்மறையாக இருந்தாலும் அதற்கு நாங்கள் எதிர்வினையாற்றுவோம்.

ஆப்கானிஸ்தானை பொறுத்தமட்டில், இந்திய-ஆப்கானிய மக்களுக்கு இடையேயான உறவு வலுவானதாக இருக்கிறது. ஆப்கான் சமூகத்தின் மீது இந்தியாவுக்கு நல்லெண்ணம் உள்ளது.

வங்காளதேசத்தைப் பொறுத்தவரை, அந்த நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து, அந்த நாட்டுடனான நமது உறவு மேலும் கீழுமாகவே இருந்துள்ளது.

தற்போது அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது பாதிப்பை ஏற்படுத்தலாம். அதேநேரத்தில், பரஸ்பர நலன்களை கண்டறிவதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.

இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.

Tags:    

Similar News