பெண் அமைச்சரை கொச்சையாக பேசிய வழக்கு.. கர்நாடக பாஜக தலைவர் சி.டி. ரவிக்கு இடைக்கால ஜாமீன்
- ஹெப்பல்கருக்கு எதிராக சி.டி.ரவி பலமுறை இழிவான வார்த்தையைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
- கைதுக்கு ஒத்துழைக்காத சி.டி.ரவியை சட்டசபை வளாகத்தில் வைத்து கைது செய்து குண்டுகட்டாக தூக்கிச்சென்றது.
பெண் அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கரை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி கைது செய்யப்பட்ட கர்நாடக பாஜக தலைவர் சி.டி.ரவிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துகள் குறித்து கர்நாடக சட்டசபையில் வாதங்கள் நடைபெற்றது.
சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகு ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதத்தின் போது, அமைச்சர் ஹெப்பல்கருக்கு எதிராக முன்னாள் பாஜக பொதுச் செயலாளர் சி.டி.ரவி பலமுறை இழிவான வார்த்தையை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. லட்சுமி ஹெப்பால்கரின் நடத்தை மற்றும் கற்பை குறை கூறும் கடுஞ்சொல்லை சிடி ரவி தனது பேசியதாக கூறப்படுகிறது.
அமைச்சரின் புகாரின் பேரில் சி.டி.ரவி மீது சட்டப்பிரிவு 75 (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் சட்டப்பிரிவு79 (பெண்ணின் நாகரீகத்தை அவமதிக்கும் நோக்கில் வார்த்தை, சைகை அல்லது செயல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைதுக்கு ஒத்துழைக்காத சி.டி.ரவியை சட்டசபை வளாகத்தில் வைத்து கைது செய்து குண்டுகட்டாக தூக்கிச்சென்றது.
கைது செய்யப்பட்டதற்குப் பின் வெளியான வீடியோ பதிவு ஒன்றில், காங்கிரஸ் அரசு தன்னை படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், போலீஸ் காவலில் சித்திரவதைக்கு உள்ளானதாகவும் சி.டி.ரவி கூறினார்.
சி.டி.ரவி கைது செய்யப்பட்டதற்கு எதிராக பெங்களூரு, சிக்மகளூர், பெலகாவி ஆகிய இடங்களில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் அவருக்கு நேற்று இடைக்கால ஜாமீன் வழங்கி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் வெளியே வந்த அவர், சிறையில் தன்னை பயங்கரவாதி போல் நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.