இந்தியா

70 மணி நேரத்தை இழந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்.. மசோதாக்கள் - அவை நடவடிக்கைகள் ஒரு பார்வை

Published On 2024-12-21 01:26 GMT   |   Update On 2024-12-21 01:26 GMT
  • மக்களவையின் 20 அமர்வுகள், மாநிலங்களவையில் 19 அமர்வுகள் நடைபெற்றன
  • மூன்றாவது அமர்வில், விவாத நேரம் வெறும் 62 மணிநேரமாக சரிந்தது.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் அதானி விவகாரத்தாலும், இறுதியில் அம்பேத்கர் குறித்த அமித் ஷா பேச்சாலும் கூட்டத்தொடர் குழப்பத்துக்கு மத்தியில் நேற்று (டிசம்பர் 20) ஒத்திவைப்பு அறிவிப்போடு முடிவடைந்தது.

மக்களவையின் 20 அமர்வுகள், மாநிலங்களவையில் 19 அமர்வுகள் நடைபெற்றன. மக்களவை அதன் திட்டமிடப்பட்ட நேரத்தில் 52 சதவீதமும், மாநிலங்களவை அதன் திட்டமிடப்பட்ட நேரத்தில் 39 சதவீதமும் மட்டுமே செயல்பட்டது என PRS அறிக்கை கூறுகிறது.

முதல் வாரத்தில், இரு அவைகளும் திட்டமிட்ட நேரத்தில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே செயல்பட்டன. கூட்டத் தொடர் முழுவதும் தொடர் இடையூறுகளால் 70 மணி நேரத்துக்கும் அதிகமான திட்டமிடப்பட்ட நேரத்தை பாராளுமன்றம் இழந்துள்ளது.

 

முதல் அமர்வில் மக்களவை 5 மணி நேரம் 37 நிமிடங்களையும், இரண்டாவது அமர்வில் 1 மணி நேரம் 53 நிமிடங்களையும் இழந்தது. மூன்றாவது அமர்வு அமித் ஷா- அம்பேத்கர் சர்ச்சையால், தடங்கல்கள் காரணமாக 65 மணிநேரம் மற்றும் 15 நிமிடங்களை இழந்தது

இடையூறுகள் விவாதங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தையும் கணிசமாக பாதித்தன. முதல் அமர்வில், மக்களவையில் 34.16 மணி நேரம் விவாதம் நடைபெற்றது.

இரண்டாவது அமர்வின் போது இந்த நேரம் 115.21 மணிநேரமாக உயர்ந்தது. ஆனால் மூன்றாவது அமர்வில், விவாத நேரம் வெறும் 62 மணிநேரமாக சரிந்தது.

 இடையூறுகள் இருந்தபோதிலும், அதனால் வீணான நேரத்தை ஈடுசெய் எம்.பி.க்கள், 7 மணி நேரம் 33 நிமிடங்கள் கூடுதலாக வேலை செய்துள்ளனர். மூன்றாவது அமர்வின் போது, திட்டமிடப்பட்ட அலுவல்களை நிறைவு செய்யும் முயற்சியில் சபை நடவடிக்கைகள் 21.7 மணிநேரம் நீடித்தது.

முதல் அமர்வில் மசோதாக்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. இரண்டாவது கூட்டத்தொடரில், அரசாங்கம் 12 மசோதாக்களை அறிமுகப்படுத்தியது, அவற்றில் நான்கு மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. மூன்றாவது அமர்வில் ஐந்து மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன, அவற்றில் நான்கு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன.

 

மூன்றாவது அமர்வில், கடலோர கப்பல் மசோதா வணிக கப்பல் மசோதா,  ஒரே நாடு ஒரே தேர்தல் (129 வது சட்டத்திருத்தம்) மசோதா யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதா, 2024 ஒதுக்கீடு (எண் 3) மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

வங்கிச் சட்டங்கள் திருத்த மசோதா, ரயில்வே திருத்த மசோதா,பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா, 2024 ஒதுக்கீடு (எண். 3) மசோதாஉள்ளிட்டவை அமர்வில் நிறைவேற்றப்பட்டன.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அரசியலமைப்பை நாடு ஏற்றுக்கொண்ட 75 வது ஆண்டை குறிக்கும் விதமாக சிறப்பு உரைகளும் இரு அவைகளிலும் நடந்தன. 

Tags:    

Similar News