கோட்டா கோச்சிங் சென்டர் துயரம் : ஒரே நாளில் 2 மாணவர்கள் தற்கொலை.. ஆண்டின் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
- மாணவி ஒருவரின் உடல் இன்று காலை 10 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது.
- நாளை மறுநாள் நடைபெற இருந்த ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு எழுத இருந்தார்.
கோச்சிங் சென்டர்கள் மண்டியிருக்கும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட், ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
கடந்த வருடம் கோட்டாவில் வெவ்வேறு பயிற்சி மையங்களில் படித்து வந்த 17 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.
இந்நிலையில் இந்த வருட தொடக்கத்தில் ஒரே மாதத்தில் 6 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று ஒரே நாளில் மட்டுமே 2 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
கோட்டாவின் ராஜீவ் நகர் காவல் நிலையப் பகுதியில் உள்ள விடுதி அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் மாணவி ஒருவரின் உடல் இன்று காலை 10 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது.
உயிரிழந்த மாணவியின் பெயர் அஃப்ஷா ஷேக்[23 வயது], இவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர். அஃப்ஷா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோட்டாவுக்கு வந்து ராஜீவ் நகர் பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்து விடுதியில் தங்கி நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இன்ஜினீயரிங் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான ஜேஇஇ பரீட்சைக்கு கோட்டாவில் பயிற்சி மையத்தில் படித்து வந்த அசாமின் நாகோன் பகுதியைச் சேர்ந்த பராக் என்ற மாணவர் ஒருவரும் தற்கொலை செய்துகொண்டார்.
மஹாவீர் நகர் பகுதியில் அவர் தங்கியிருந்த வீட்டில் இன்று மதியம் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. நாளை மறுநாள் நடைபெற இருந்த ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு எழுத இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும், ஒரு இலட்சம் முதல் இரண்டு லட்சம் இளைஞர்கள் மற்றும் பெண்கள் கோட்டாவிற்கு வருகிறார்கள். இங்கு காளான்கள் போல் பெருகி வரும் பயிற்சி மையங்கள் அதிக லாபம் ஈட்டும் தொழிலாக மாற்றியுள்ளது - கடந்த ஆண்டு மட்டும் ரூ.3,500 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியது.