இந்தியா

டெல்லி பயணத்தை ஒத்தி வைத்தார் மம்தா: நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பா?

Published On 2024-07-25 10:35 GMT   |   Update On 2024-07-25 10:35 GMT
  • மம்தா பானர்ஜி இன்று டெல்லி செல்ல இருந்த நிலையில் பயணத்தை ஒத்தி வைத்துள்ளார்.
  • நாளை புறப்படுவாரா? என்பது குறித்து உறுதியான தகவல் ஏதும் இல்லை.

2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டது.

தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் பெயர் கூட பட்ஜெட்டில் வாசிக்கப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ததுடன் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

வருகிற 27-ந்தேதி டெல்லி பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல் மந்திரிகள் கலந்து கொள்ளும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களில் பலர் புறக்கணித்துள்ளனர்.

நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மேற்கு வங்காள மாநில முதல்வர் இன்று டெல்லி செல்வதாக இருந்தார். கடைசி நேரத்தில் பயணத்தை ஒத்திவைத்துள்ளார்.

"இன்று மதியம் மம்தா பானர்ஜி டெல்லி புறப்பட இருந்தார். ஆனால் இன்று டெல்லி புறப்படமாட்டார். எந்த காரணத்தையும் அவர் தெரிவிக்கவில்லை" என திரணாமுல் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

நாளை டெல்லி புறப்படுவாரா? என்ற கேள்விக்கு, "தற்போது வரை அதுகுறித்து ஏதும் தெரியாது. இது குறித்து நாளைக்குதான் தெரியவரும்" எனவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இடம் பிடித்துள்ளது. மம்தாவும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தால் ஏறக்குறைய இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் (மாநிலங்களில் ஆட்சி) புறக்கணித்ததாகும்.

Tags:    

Similar News