இந்தியா

மணிப்பூரில் விறகு சேகரிக்க சென்ற 4 பேரில் 3 பேர் கொலை: பதட்டம் அதிகரிப்பு

Published On 2024-01-11 10:39 GMT   |   Update On 2024-01-11 10:39 GMT
  • மணிப்பூரில் அவ்வப்போது வன்முறை வெடித்த வண்ணம்தான் உள்ளது.
  • பிஷ்ணுபூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதால் பதட்டம் அதிகரிப்பு.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் மைதேயி- குக்கி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 2 பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோக்கள் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இரு பிரிவினரிடையேயான மோதலால் 180-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடு, உடமைகளை இழந்த நிலையில் ஏராளமானோர் அண்டை மாநிலத்திற்கு இடம் பெயர்ந்தனர். அங்கு ராணுவம், பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் அவ்வப்போது அங்கு வன்முறை வெடித்து வருகிறது. புத்தாண்டு தினத்தன்றும் அங்கு துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதனால் பதட்டம் நிலவியது.

இந்நிலையில் மணிப்பூரில் பிஷ்ணுபூர் மாவட்டம் அகசோய் பகுதியைச் சேர்ந்த நான்கு பேர், சுராசந்த்பூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள மலைப்பகுதியில் விறகு சேகரிப்பதற்காக நேற்று சென்றுள்ளனர். தாரா சிங், இபோம்சா சிங் (51), அவரது மகன் ஆனந்த் சிங் (20) மற்றும் ரோமன் சிங் (38) ஆகிய 4 பேரும் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கும்பலால் சிறைப்பிடிக்கப்பட்டு இருக்கலாம் என அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் நான்கு பேரில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடைய உடல்கள் சுராசந்த்பூர் மாவட்டம் ஹாடக் பைலென் காட்டுப்பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இபோம்சா சிங் (51), அவரது மகன் ஆனந்த் சிங் (20) மற்றும் ரோமன் சிங் (38) எனத் தெரியவந்துள்ளது. மூன்று பேரையும் ஆயுதமேந்திய குழு கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தாராசிங் மட்டும் என்ன ஆனார்? என்று தெரியவில்லை. அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே நேற்று பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள கும்பி- தவுபால் மாவட்டத்தில் உள்ள வாங்கூவில் இரு பிரிவனருக்கு இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற வன்முறைக்குப் பிறகு மணிப்பூரில் ஏராளமானோர் மாயமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News