நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கிறேன்: மணிப்பூர் முதல் மந்திரி
- முதல் மந்திரி பைரேன் சிங் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
- இந்த ஆண்டு முழுவதும் மிகவும் துரதிருஷ்டவசமானது என்றார்.
இம்பால்:
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் முதல் மந்திரி பைரேன் சிங் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த ஆண்டு முழுவதும் மிகவும் துரதிருஷ்டவசமானது. கடந்த மே 3 முதல் இன்று வரை என்ன நடக்கிறது என்பதற்கு நான் வருந்துகிறேன், மாநில மக்களிடம் வருந்துகிறேன்.
பலர் தங்கள் அன்புக்கு உரியவர்களை இழந்துள்ளனர். பலர் வீடுகளை விட்டு வெளியேறினர். நான் உண்மையிலேயே வருத்தப்படுகிறேன். நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.
கடந்த 3-4 மாதங்களாக அமைதியை நோக்கி முன்னேறி வருவதைக் கண்டு 2025 புத்தாண்டுடன் மாநிலத்தில் இயல்பு நிலையும் அமைதியும் திரும்பும் என நம்புகிறேன்.
நாம் இப்போது கடந்த கால தவறுகளை மறந்து, புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும். அமைதியான மணிப்பூர், வளமான மணிப்பூர் காண நாம் அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் என மாநிலத்தின் அனைத்து சமூகங்களுக்கும் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.
கடந்த 2023 மே முதல் அக்டோபர் வரை 408 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
நவம்பர் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை 345 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் பதிவாகின.
இந்த ஆண்டு மே முதல் இதுவரை 112 துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
கொள்ளையிடப்பட்ட ஆயுதங்களில் 3,112 ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. 2,511 வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுவரை 625 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 12,047 எப்.ஐ.ஆர்.கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.