இந்தியா

மோடி அரசின் வர்த்தக கொள்கை இந்தியாவிற்கு பேரழிவை ஏற்படுத்துகிறது: கார்கே குற்றச்சாட்டு

Published On 2025-02-18 15:17 IST   |   Update On 2025-02-18 15:59:00 IST
  • வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து 1.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
  • டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 87 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் வர்த்தக பற்றாக்குறை வான் அளவிற்கு உயர்ந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் மோடி தலைமையிலான அரசை கடுமையான வகையில் விமர்சனம் செய்துள்ளார். வர்த்தக கொள்கை தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தில் கூறியிருப்பதாவது-

மோடி அரசின் நிதியமைச்சர் நம்முடைய பொருளாதாரம் சிறந்த வருமானத்தை தருவதாக சொல்கிறார். இதைவிட முரண்பட்ட விசயம் ஏதும் இருக்க முடியாது.

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த ஆண்டில் தற்போது வரை 45 லட்சம் கோடி ரூபாய் சிறிய முதலீட்டாளர்களின் செல்வங்கள் அழிக்கப்பட்டுள்ளது. நிஃப்டி 50-யில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களின் காலாண்டு வருமானம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து 1.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர். இதில் இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து தற்போது வரை சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் அடங்கும். இது சிறு மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களின் பணத்தை அழிக்க வழிவகுத்தது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 87 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் வர்த்தக பற்றாக்குறை வான் அளவிற்கு உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இறக்குமதி 62.21 சதவீதமாக உயர்ந்துள்ளது. மோடியின் வர்த்தக கொள்கை இந்தியாவிற்கு பேரழிவை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News