21 ஆண்டுகளாக நுரையீரலில் சிக்கிய பேனா மூடியுடன் வாழ்ந்த வாலிபர்- டாக்டர்கள் அதிர்ச்சி
- வாலிபருக்கு திடீரென இருமல் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது.
- வாலிபர் 5 வயது குழந்தையாக இருந்தபோது தற்செயலாக ஒரு பேனா மூடியை விழுங்கி விட்டார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் கரீம் நகரை சேர்ந்த 26 வயது வாலிபர். இவருக்கு திடீரென இருமல் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது.
அவரை மாதப்பூரில் உள்ள கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது நுரையீரல் பகுதியில் கட்டி போன்று அமைப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அறுவை சிகிச்சையின் மூலம் அதனை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர்.
அப்போது வாலிபரின் நுரையீரலில் சிக்கியிருந்தது பேனா மூடி என்பது தெரிய வந்தது. இதனை அகற்றிய டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வாலிபரின் குடும்பத்தினரிடம் கேட்டனர். அப்போது வாலிபர் 5 வயது குழந்தையாக இருந்தபோது தற்செயலாக ஒரு பேனா மூடியை விழுங்கி விட்டார்.
எந்த பாதிப்பும் இல்லாததால் நாங்கள் சிகிச்சை அளிக்கவில்லை என தெரிவித்தனர். 21 ஆண்டுகளாக நுரையீரலில் பேனா மூடியுடன் வாழ்ந்த வாலிபர் தற்போது நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.