உத்தரபிரதேசத்தில் ரத்த பிளாஸ்மாவுக்கு பதிலாக சாத்துக்குடி பழச்சாறு ஏற்றப்பட்ட நோயாளி பலி
- உ.பி. தனியார் ஆஸ்பத்திரிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
- 3 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
லக்னோ :
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜால்வா பகுதியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. கடந்த 14-ந்தேதி, டெங்கு பாதிப்புடன் பிரதீப் பாண்டே என்பவர் அந்த ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 17-ந்தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால், வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். முதலில் சிகிச்சை பெற்ற தனியார் ஆஸ்பத்திரியில், பிரதீப் பாண்டேவுக்கு ரத்த பிளாஸ்மாவுக்கு பதிலாக சாத்துக்குடி பழச்சாறு ஏற்றப்பட்டதாகவும், அதுவே அவரது மரணத்துக்கு காரணம் என்றும் அவருடைய உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மாநில சுகாதாரத்துறை உத்தரவின்பேரில், தனியார் ஆஸ்பத்திரிக்கு 'சீல்' வைக்கப்பட்டது. 3 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். பிளாஸ்மா பாக்கெட், பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.