நேபாள பிரதமர் அரசுமுறை பயணம்- பேச்சுவார்த்தைக்கு பிறகு பிரதமர் மோடியுடன் 7 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்து
- பிரதமர் மோடியும், நேபாள பிரதமர் பிரசண்டாவும் நேற்று சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.
- வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு ஏற்ற வகையில் ஒப்பந்தம்.
நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசண்டா, அரசுமுறை பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் 4 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இவருடன் உயர்மட்டக் குழுவினரும் வந்துள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள ஐதராபாத் பவனில் பிரதமர் மோடியும், நேபாள பிரதமர் பிரசண்டாவும் நேற்று சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பேச்சுவார்த்தையை தொடர்ந்து, வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு ஏற்ற வகையில் இருநாடுகளுக்கிடையே 7 ஒப்பந்தங்களில் கையெழுத்தாகின.
இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, " நாங்கள் இரு தரப்பு உறவை இமாலய உயரத்துக்கு எடுத்துச்செல்வதற்கு தொடர்ந்து பாடுபடுவோம். இதே உணர்வுடன் நாங்கள், அது எல்லைப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, பிற பிரச்சினைகளாக இருந்தாலும் சரி எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்போம்.
கலாசார, ஆன்மிக உறவுகளை மேலும் பலப்படுத்தும் விதத்தில், பிரதமர் பிரசண்டாவும் நானும் ராமாயண சுற்று தொடர்பான திட்டங்களை விரைவுபடுத்த முடிவு செய்துள்ளோம்" என்றார்.