வெளிநாட்டுக் கூட்டங்களில் எனது முகத்தை மறைக்க முயன்றேன்: மந்திரி நிதின் கட்கரி
- சாலை விபத்துகள் தொடர்பான சர்வதேச கூட்டங்களில் பங்கேற்க சென்றுள்ளேன்.
- அங்கு சென்றிருந்தபோது எனது முகத்தை மறைக்க முயன்றேன் என்றார் நிதின் கட்கரி.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மக்களவையில் சாலை விபத்துகள் தொடர்பான குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது கேட்கப்பட்ட கேள்விக்கு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி கூறியதாவது:
விபத்துகளின் எண்ணிக்கையை குறைப்பது என்பதை மறக்கவேண்டும். விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்பதை ஒப்புக்கொள்வதில் தயக்கம் இல்லை.
சாலை விபத்துகள் தொடர்பான மாநாடுகளில் பங்கேற்கச் செல்லும்போது என் முகத்தை மறைக்க முயன்றேன்.
2014 ல் முதல்முறை பதவியேற்ற போது சாலை விபத்துகளை 50 சதவீதம் குறைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்தேன். ஆனால், நிலைமை இன்னும் மோசமாகி உள்ளது.
போதுமான உள்கட்டமைப்பு இல்லாதது, சாலை விதிகளைப் பின்பற்றாதது உள்ளிட்டவை காரணமாக விபத்துகள் நிகழ்கின்றன.
இந்தியாவில் மனித நடத்தைகள் மேம்படுவதற்கு பல விஷயங்கள் மாற வேண்டும். சமூகம் மாற வேண்டும். சட்டத்தின் ஆட்சி மதிக்கப்பட வேண்டும்.
சாலை ஓரங்களில் லாரிகள் முறையற்ற வகையில் நிறுத்தப்படுகின்றன. பல லாரி டிரைவர்கள் விதிகளை மதிப்பது கிடையாது.
பஸ்கள் கட்டுமானத்தில் சர்வதேச பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம். அவசர காலங்களில் ஜன்னலை உடைத்து வெளியேற சுத்தியல் வைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சில ஆண்டுக்கு முன் எனது குடும்பமும் விபத்தில் சிக்கியது. கடவுளின் கருணையால் நானும் எனது குடும்பமும் தப்பினோம். இந்த அனுபவம்தான் சாலை பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்ற உறுதியை ஏற்படுத்தியது என தெரிவித்தார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் விபத்துகளில் சுமார் 1.78 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். அதில் 60 சதவீதம் பேர் 18 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்கள் என்ப்து குறிப்பிடத்தக்கது.