21 மொஹல்லா கிளினிக்குகளில் கழிப்பறை இல்லை: கொரோனா நிதி பயன்படுத்தப்படவில்லை- அடுத்த சிஏஜி அறிக்கை
- கொரோனா காலத்தில் மத்திய அரச வழங்கிய நிதியை முழுமையாக பயன்படுத்தவில்லை.
- மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக கூடுதலாக 119 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்றுள்ளார். முதல் சட்டசபை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
சிஏஜி அறிக்கைகளை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து ஆம் ஆத்மி ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை வெளிப்படுத்துவோம் என பாஜக தலைவர்கள் தெரிவித்தனர்.
அதன்படி டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பாக சி.ஏ.ஜி. அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று மருத்துவ கட்டமைப்புகள் குறித்து சி.ஏ.ஜி. அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையில் ஆம் ஆத்மி கட்சி ஏற்படுத்திய 21 மொஹல்லா கிளினிக்குகளில் கழிப்பறைகள் இல்லை. கொரோனா தொற்றுக் காலத்தில் வழங்கப்பட்ட நிதியை பயன்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்காலத்தில் மத்திய அரசு டெல்லி மாநிலத்திற்கு 787.91 கோடி ரூபாய் ஒதுக்கியிருந்தது. அதில் 582.84 கோடி ரூபாய் மட்டுமே ஆம் ஆத்மி அரசால் பயன்படுத்தப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படாத தொகையில் மனித வளங்களுக்கான ரூ.30.52 கோடியும் அடங்கும். மனித வளம் என்பது பணியாளர்களுக்குக் குறைவான ஊதியம் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களை நியமித்தல் என்பதைக் குறிக்கிறது.
கூடுதலாக 119.95 கோடி ரூபாய் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் (PPE போன்ற பாதுகாப்பு உபகரணங்கள்) வாங்குவதற்காக வழங்கப்பட்டது. அதில் 83.14 கோடி ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் படுக்கையை அதிகரிக்க பட்ஜெட்டை சரியாக பயன்படுத்துவதில் தோல்வியடைந்து விட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2016/17 முதல் 2020/21 பட்ஜெட்டில் 32 ஆயிரம் படுக்கைகள் அமைப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் 1357 படுக்கைகள் மடடுமே கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது.
மொஹல்லா மருத்துவமனையில் 21-ல் பாத்ரூம் இல்லை. 15 கிளினிக்குகளில் மின்சார பேக்-அப் இல்லை. 12-ல் மாற்றுத்திறனாளிக்கு உகந்த வகையில் அமைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை.