பிரதமர் மோடியை பதவியில் இருந்து நீக்காமல் செத்துவிட மாட்டேன்: கார்கே ஆவேசம்
- ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பிரசார கூட்டத்தில் பேசினார்.
- அப்போது அவர், பிரதமர் மோடியை பதவியில் இருந்து நீக்கும் வரை உயிருடன் இருப்பேன் என்றார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. முதல் இரு கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், நாளை மறுதினம் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜஸ்ரோட்டா பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது கார்கேவுருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை இருக்கைக்கு அழைத்துச் சென்று உட்காரவைத்தனர். இதையடுத்து, சிறிது ஓய்வெடுத்தபின் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து திரும்பப் பெற்றுத்தர போராடுவோம். எனக்கு 83 வயதாகிறது. அதே வேளையில், வெகு சீக்கிரத்தில் நான் ஒன்றும் சாகப் போவதில்லை. பிரதமர் மோடியை அதிகாரத்திலிருந்து நீக்கப்படும் வரை உயிருடன் இருப்பேன் என ஆவேசமாகத் தெரிவித்தார்.