இந்தியா

உடல் உறுப்புகள் கடத்தல் கும்பல் தலைவன் கேரளாவில் கைது

Published On 2024-05-20 05:34 GMT   |   Update On 2024-05-20 05:34 GMT
  • ஏராளமானோரை இதுபோன்று அழைத்துச் சென்று உடல் உறுப்புகளை பெற்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
  • வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறதா என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வாழப்பாடு பகுதியை சேர்ந்தவர் சபித் நாசர். இவர் மனித உடல் உறுப்புகளை சட்டவிரோதமாக பெற்று வெளிநாடுகளில் அதிகவிலைக்கு விற்று வந்ததாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் அவரது நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்தனர்.

இந்நிலையில் அவர் ஈரான் நாட்டுக்கு சென்றுவிட்டு விமானத்தில் கேரளாவுக்கு திரும்பி வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர் பயணித்த விமானம் வந்த கொச்சி நெடும்பச்சேரி விமான நிலையத்திற்கு போலீசார் விரைந்தனர். அங்கு சபித் நாசரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

மேலும் அவருடன் உடல் உறுப்பை சட்டவிரோதமாக பெறுவதற்கு அழைத்துச் செல்லப்பட்ட நபரும் வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, தனது சிறுநீர கத்துக்காக தன்னை ஈரானுக்கு அழைத்துச் சென்றிருந்தாக தெரிவித்தார். இதையடுத்து சபித் நாசரை போலீசார் கைது செய்தனர்.

சபித் நாசர் பணம் தேவைப்படும் கஷ்டப்பட்ட குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, உடல் உறுப்பு தானம் செய்தால் பணம் கிடைக்கும் என்றுஆசை வார்த்தை கூறுவார். அவ்வாறு கூறும்போது தனது வலையில் விழுபவர்களை ஈரானுக்கு அழைத்துச்சென்று, அறுவை சிகிச்சை செய்து அவரது உடல் உறுப்புகளை பெற்றிருக்கிறார்.

பின்பு அதனை கள்ளச்சந்தையில் அதிக விலைக்குவிற்று சம்பாதித்து வந்திருக்கிறார். அவர் ஏராளமானோரை இதுபோன்று அழைத்துச் சென்று உடல் உறுப்புகளை பெற்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சபித் நாசரின் செல்போனை ஆய்வு செய்ததில் உடல் உறுப்புகளுக்காக ஆட்களை கடத்தியது, கடத்தப்பட்ட நபர்களின் உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து எடுத்து அதிக விலைக்கு விற்றது உள்ளிட்டவைகள் தொடர்பாக ஆதாரங்கள் சிக்கின.

சபித் நாசர் மீது உடல் உறுப்புகளை சட்டவிரோத மாக எடுத்து ஈரானுக்கு கடத்தி கொண்டுசென்றது தொடர்பாக பல புகார்கள் வந்துள்ளதாகவும், உடல் உறுப்புகள் கடத்தல் கும்பலின் முக்கிய புள்ளியாக அவர் செயல்பட்டு வந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறதா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News