ஆஸ்கார் விருது வென்ற பாலஸ்தீனிய இயக்குநர் மீது தாக்குதல்.. இஸ்ரேலிய ராணுவத்தால் சிறைபிடிப்பு!
- இஸ்ரேலிய குடியேறிகள் தாக்குதலின்போது ஹம்தான் பல்லால் உடன் இருந்த யுவல் ஆபிரகாமும் காயமடைந்துள்ளார்.
- இஸ்ரேலிய இராணுவத்தால் தங்கள் கிராமங்கள் இடிக்கப்படுவதைத் தடுக்கும் மேற்கு கரை மசாஃபர் யட்டா குடிமக்களின் போராட்டத்தை சித்தரிக்கிறது.
ஆஸ்கார் விருது பெற்ற 'நோ அதர் லேண்ட்' என்ற பாலஸ்தீன ஆவணப்படத்தின் இணை இயக்குநர் ஹம்தான் பல்லால். இவர் தற்போது பாலஸ்தீன மேற்கு கரையில் (west bank) சட்டவிரோதமாக ஊடுருவி ஆக்கிரமிப்பு செய்த இஸ்ரேலியர்களால் தாக்கப்பட்டு அந்நாட்டு ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார்.
நோ அதர் லேண்ட் படத்தின் மற்றொரு இயக்குனர் யுவல் ஆபிரகாம் இந்த ததகவலை பகிர்ந்துள்ளார். "எங்கள் 'நோ அதர் லேண்ட்' படத்தின் இணை இயக்குநரான ஹம்தான் பல்லால், இஸ்ரேலிய குடியேறிகள் குழுவால் தாக்கப்பட்டார். இதன் காரணமாக அவருக்கு தலை மற்றும் வயிற்றில் காயம் ஏற்பட்டு இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது" என்று தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் ஹம்தானை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸை இஸ்ரேலிய வீரர்கள் தாக்கி, ஹம்தானை கைது செய்து கொண்டு சென்றனர் என்று அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய குடியேறிகள் தாக்குதலின்போது ஹம்தான் பல்லால் உடன் இருந்த யுவல் ஆபிரகாமும் காயமடைந்துள்ளார்.
இந்த ஆண்டு சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்ற நோ அதர் லேண்ட் படம், இஸ்ரேலிய இராணுவத்தால் தங்கள் கிராமங்கள் இடிக்கப்படுவதைத் தடுக்கும் மேற்கு கரை மசாஃபர் யட்டா குடிமக்களின் போராட்டத்தை சித்தரிக்கிறது.
இந்த படத்தை மசாஃபர் யட்டாவைச் சேர்ந்த பால்ஸ்தீனிய இயக்குநர்கள் ஹம்தான் பல்லால் மற்றும் பாஸல் அட்ரா மற்றும் இஸ்ரேலிய இயக்குநர்கள் யுவல் ஆபிரகாம், ரேச்சல் ஸ்ரோர் ஆகிய 4 பேரும் சேர்ந்து இயக்கியுள்ளனர். இந்நிலையில் தற்போது இயக்குநர் ஹம்தாம் பல்லா கைது செய்யப்பட்டுள்ளது சர்வதேச அளவில் கண்டனங்களை குவித்து வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள இஸ்ரேல் ராணுவம், நாங்கள் அந்த இடத்தை அடைந்தபோது பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையில் வன்முறை மோதல் நடந்துகொன்றிருந்தது. அவர்கள் ஒருவருக்கொருவர் கற்களை வீசிக் தாக்கிக் கொண்டிருந்ததனர்.
பயங்கரவாதிகள்(பாலஸ்தீனியர்கள்) இஸ்ரேலிய பொதுமக்கள் மீது கற்களை எறிந்து அவர்களின் வாகனங்களை சேதப்படுத்தியதால் சண்டை தொடங்கியுள்ளது. பல பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசியதை அடுத்து, மூன்று பாலஸ்தீனியர்களும் ஒரு இஸ்ரேலியரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.