தேர்வு செய்யப்படாத முதல்வர்: பதவியேற்பு விழாவுக்கு தயாராகும் ராம்லீலா மைதானம்
- டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 48 இடங்களில் வெற்றி பெற்றது.
- டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மோசமான தோல்வியை சந்தித்தது.
புதுடெல்லி:
டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர். ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.
டெல்லி தேர்தலில் பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது இடம் பிடித்தது.
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும், டெல்லியில் பா.ஜ.க. சார்பில் முதலமைச்சர் ஆக பதவியேற்க போவது யார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.
இதற்கிடையே, டெல்லியின் அடுத்த முதலமைச்சர் வரும் வியாழக்கிழமை அன்று பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில், ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.
முதல் மந்திரியை தேர்வு செய்வதற்கான எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடைபெறும் என பா.ஜ.க. அறிவித்துள்ளது.