'மோடி - அதானி' கார்டூன் பையுடன் நாடாளுமன்றத்திற்கு வந்த ராகுல்காந்தி
- அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,000 கோடிக்கு மேல் லஞ்சம் கொடுத்துள்ளார் என அமெரிக்கா குற்றம்சாட்டியது.
- தொழிலதிபர் அதானியை கைது செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
அதானியின் சூரிய மின்சக்தி நிறுவனம் தயாரிக்கும் மின்சாரத்தை வினியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை பெறுவதற்காக ஆந்திரா, ஒடிசா, தமிழ்நாடு, காஷ்மீர், சத்தீஸ்கர் மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,000 கோடிக்கு மேல் லஞ்சம் கொடுத்துள்ளார் என அமெரிக்கா குற்றம்சாட்டியது.
இதை மறைத்து அமெரிக்கர்களிடம் இருந்து அதிகளவிலான முதலீடுகளைப் பெற்றுள்ளதாகவும், இது அமெரிக்க சட்டத்துக்கு எதிரானது என அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (எஸ்.இ.சி.) சார்பில் நியூயார்க் பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. தொழிலதிபர் அதானியை கைது செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
இந்நிலையில், அதானி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மோடி, அதானிக்கு எதிராக இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் 6-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் மோடி - அதானி கார்டூன் அச்சிடப்பட்ட பையுடன் இன்று நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து போராட்டம் நடத்தினர்.
இதற்கு முன்னதாக மோடியும் அதானியும் ஒன்று தான் என்ற வாசகத்தை காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் தங்களது சட்டைக்கு பின்னால் அச்சிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.