இந்தியா

தங்கம் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவுக்கு மேலும் ஒரு சிக்கல்

Published On 2025-03-10 10:55 IST   |   Update On 2025-03-10 10:55:00 IST
  • ரன்யா ராவ் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெரோடா இந்தியா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தை தொடங்கினார்.
  • ரன்யா ராவுக்கு அரசு சார்பில் நிலம் ஒதுக்கி இருப்பதற்கான ஆவணங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பிரபல தமிழ் பட நடிகையும், கர்நாடக மாநில வீட்டு வசதித்துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திரா ராவின் வளர்ப்பு மகளுமான நடிகை ரன்யா ராவ் கடந்த 3-ந்தேதி துபாயில் இருந்து 12 கிலோ 800 கிராம் தங்கத்தை கடத்திக் கொண்டு பெங்களூருவுக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்தபோது அவரை டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு (டி.ஆர்.ஐ) அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் ரன்யா ராவ் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே அவரை, டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது ரன்யா ராவ், எனது தந்தை மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி என்பதால் தங்க கடத்தல் கும்பல் என்னை பயன்படுத்தி விட்டனர். சில அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களால் சிக்கிக் கொண்டேன். நான் இந்த தங்கம் கடத்தல் வேலையை கமிஷனுக்காக கடந்த 1½ வருடமாக செய்து வருகிறேன் என வாக்குமூலம் அளித்தார். மேலும் ரன்யா ராவ் தங்கம் கடத்தல் வழக்கில் மும்பை மற்றும் பெங்களூருவை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனால் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. ரன்யா ராவ் போலீஸ் காவல் இன்றுடன் நிறைவு பெறுவதால் அவரை மீண்டும் பெங்களூரு சிறப்பு பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதே நேரத்தில் ரன்யா ராவ் சம்பந்தப்பட்ட தங்கம் கடத்தல் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சி.பி.ஐ. தரப்பில் ரன்யா ராவை காவலில் எடுத்து விசாரிக்க இன்று கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

இந்த நிலையில், தங்கம் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பமாக ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு மந்திரிக்கு ரன்யா ராவுடன் தொடர்பு இருப்பது பற்றிய அதிர்ச்சி தகவல்கள் பரவி வருகிறது.

ரன்யா ராவ் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெரோடா இந்தியா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனத்தில் ரன்யா ராவ் மற்றும் அவரது சகோதரர் ரஷாப் ஆகியோர் இயக்குநர்களாக இருந்தனர். இந்த நிறுவனத்தின் பெயரில் தும்கூரில் உள்ள ஷிரா தொழிற்துறை பகுதியில் எக்கு மற்றும் டாட் பார் உற்பத்தி அலகு திறக்க நிலம் வழங்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரியிருந்தார். விண்ணப்பம் தாக்கல் செய்த 10 மாதங்களுக்குள் தும்கூரில் உள்ள ஷிரா தொழிற்துறை பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான 12 ஏக்கர் நிலத்தை அரசாங்கம் ஒதுக்கியது.

செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளுடன் தொடர்பு இல்லாமல் அரசாங்க நிலத்தை பெறுவது எளிதல்ல. தனது தந்தையின் செல்வாக்கு மற்றும் அரசியல் தலைவர் உதவியுடன் இந்த நிலத்தை அவர் வாங்கியுள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது.

ரன்யா ராவுக்கு அரசு சார்பில் நிலம் ஒதுக்கி இருப்பதற்கான ஆவணங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அந்த மந்திரி யார்? என்ற விபரம் ரன்யா ராவை சி.பி.ஐ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்கும் போது முழுவிபரங்களும் தெரியவரும். இந்த நிலையில் நிலம் ஒதுக்கியது தொடர்பாக கர்நாடக அதிகாரி மகேஷ் என்பவர் ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் முந்தைய அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது நடைபெற்ற 137-வது மாநில அளவிலான ஒற்றை சாளர அனுமதிக்குழு கூட்டத்தின் போது ஜெரோடா இந்தியா பிரைவேட் நிறுவனத்திற்கு கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 2-ந் தேதி 12 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News