இந்தியா

மதுபான ஊழல் குற்றச்சாட்டு: சத்தீஸ்கர் முன்னாள் முதல்-மந்திரி மகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

Published On 2025-03-10 12:09 IST   |   Update On 2025-03-10 12:09:00 IST
  • சத்தீஸ்கரில் இன்று மொத்தம் 15 இடங்களில் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
  • சோதனையின் மூலம் மதுபான ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் மீதான பிடி இறுகியுள்ளது.

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முதல்-மந்திரியாக பூபேஷ் பாகல் இருந்தபோது கடந்த 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மதுபானங்களை சட்ட விரோதமாக விற்று சுமார் ரூ.2,100 கோடி அளவுக்கு மோசடி நடந்ததாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் மதுபான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகல் மகன் சைதன்யா பாகல் வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

இதற்காக இன்று அதிகாலையே அமலாக்கத்துறை அதிகாரிகள் பிலாய், பத்மநகரில் உள்ள சைதன்யா பாகல் வீட்டுக்கு வந்தனர். உடனடியாக அவரது வீட்டில் சோதனை நடத்த தொடங்கினார்கள். சோதனை நடந்த போது வீட்டில் இருந்த யாரையும் வெளியே செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை.

இதேபோல் சத்தீஸ்கரில் இன்று மொத்தம் 15 இடங்களில் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். மதுபான ஊழல் தொடர்பான குற்றச்சாட்டில் பணமோசடி செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரின் 15 இடங்களிலும் இந்த சோதனை நடத்தப்படுகிறது.

சைதன்யா பாகல் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மேலும் அவருக்கு விவசாயத்திலும் ஆர்வம் உள்ளது. அவருக்கு 3 வருடங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. அவரது மனைவி கியாதியும் ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்.

இந்த சோதனையின் மூலம் மதுபான ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் மீதான பிடி இறுகியுள்ளது.

Tags:    

Similar News