தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்க மத்திய அரசு மறுப்பு- மக்களவையில் திமுக எம்.பி.க்கள் அமளி
- மக்களவையின் மையப்பகுதியில் ‘தமிழ்நாட்டுக்கு நீதி வேண்டும்’ என தமிழக எம்.பி.க்கள் முழக்கம் இட்டனர்.
- மத்திய அமைச்சரின் பேச்சுக்கு திமுக எம்.பி.க்கள் கூட்டாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று தொடங்கியது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கிய உடனேயே, தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்த திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் கொள்கையை ஏற்கவில்லை என்பதற்காக நிதி விடுவிக்காதது பழிவாங்கும் செயல் என திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் காட்டமாக பேசினார்.
இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான், "பாஜக ஆளாத மாநிலங்களான கர்நாடகா, இமாச்சல பிரதேசத்திலும் தேசிய கல்விக் கொள்கை ஏற்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது தவறானது. தமிழ்நாட்டு மாணவர்களை, திமுக தவறாக வழிநடத்தி அரசியல் செய்கிறது. PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது" என்று தெரிவித்தார்.
மத்திய அமைச்சரின் பேச்சுக்கு திமுக எம்.பி.க்கள் கூட்டாக எதிர்ப்பு தெரிவித்து அவைத்தலைவரின் இருக்கைக்கு அருகே சென்று குரல் எழுப்பினர். அவையின் மையப்பகுதியில் 'தமிழ்நாட்டுக்கு நீதி வேண்டும்' என தமிழக எம்.பி.க்கள் முழக்கம் இட்டனர்.
இதனையடுத்து, தமிழக எம்.பி.க்களின் அமளியால் மக்களவை நண்பகல் 12 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.