VIDEO: காங்கிரஸ் கேலி செய்தது, ஆனால் ரோகித் தனது பேட்டால் பதிலடி கொடுத்தார்- பாஜக
- சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் கேப்டன் ரோகித் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
- ரோகித் சர்மாவின் உடல் பருமன் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷமா முகமது பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவரில் 251 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா 49 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் கோப்பையை தட்டிச்சென்றது.
கேப்டன் ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார். 76 ரன்கள் சேர்த்து அணி வெற்றி பெற உதவிய ரோகித் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வென்றதற்கு ரோகித் சர்மாவை பாராட்டி பாஜக இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "காங்கிரஸ் கட்சி எங்கள் கேப்டனை கேலி செய்ய முயன்றது, ஆனால் அவர் தனது பேட்டை பயன்படுத்தி சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளால் வெறுப்பை பரப்பியவர்களை அமைதிப்படுத்தினார்" என்று பாஜக தெரிவித்துள்ளது.
மேலும், அந்த வீடியோவில் ரோகித் சர்மாவின் உடல் பருமன் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷமா முகமது பதிவிட்ட எக்ஸ் பதிவையும் பாஜக இணைத்துள்ளது.
முன்னதாக ரோகித் சர்மாவின் உடல் பருமன் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷமா முகமது கடுமையாக விமர்சனம் செய்தார். அதில், "ரோகித் சர்மா உடல் பருமனான விளையாட்டு வீரர். அவர் தனது உடல் எடையை குறைக்க வேண்டும். நிச்சயமாக இந்தியா இதுவரை கண்டிராத மிகவும் ஈர்க்க முடியாத கேப்டன்," என்று குறிப்பிட்டு இருந்தார்.
இவரது கருத்து சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரரது கருத்துக்கு பாஜக முதல் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தனது கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதை அடுத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷமா முகமது, ரோகித் சர்மா குறித்த பதிவை தனது எக்ஸ் தள பக்கத்தில் இருந்து நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.