இந்தியா

VIDEO: சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக் கொண்டாட்டத்தில் கலவரம்.. கடைகள் எரிப்பு - பெட்ரோல் குண்டுவீச்சு

Published On 2025-03-10 15:28 IST   |   Update On 2025-03-10 15:28:00 IST
  • ஊர்வலம் ஜமா மசூதி பகுதியை அடைந்தவுடன், அவர்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற கோஷங்களை எழுப்பி பட்டாசுகளை வெடித்தனர்.
  • 3 கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன, 6க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன.

நேற்று நியூசிலாந்து உடனான சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனை நாடு முழுவதும் பலர் வீதிகளில் திரண்டு கொண்டாடினர்.

இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள மோவ் பகுதியில் நேற்று இரவு சாம்பியன்ஸ் டிராபி வெற்றியின் கொண்டாட்டம் வன்முறையாக மாறியது.

இந்தூர் மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகர்- மோவ் நகரில் இரு குழுக்களிடையே வகுப்புவாத மோதல் வெடித்துள்ளது. நேற்று இரவு 10 மணி அளவில் 100 ரசிகர்கள் மோட்டார் சைக்கிள்களில் வெற்றி ஊர்வலம் நடத்தினர்.

ஊர்வலம் ஜமா மசூதி பகுதியை அடைந்தவுடன், அவர்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற கோஷங்களை எழுப்பினர் என்று கூறப்படுகிறது. ஜாமா மசூதி அருகே அவர்கள் பட்டாசுகளை வெடித்தனர். அங்கு மக்கள் இரவு நேர பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.

எனவே இரு குழுக்களுக்கும் இடையிலான ஏற்பட்ட வாக்குவாதம் விரைவில் வன்முறையாக மாறியது. இரு தரப்பிலிருந்தும் கல்வீச்சுக்கு சம்பவங்கள் அரங்கேறின.

பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன. சுமார் 3 கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன, 6க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன. இந்த மோதலில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்தனர். சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி கலவரக்காரர்களைக் கலைத்தனர். கடைகள் மற்றும் வாகனங்களில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு படையினர் அணைத்தனர். நிலைமை தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் மோவ் கூடுதல் எஸ்பி ரூபேஷ் திவேதி தெரிவித்தார். 

Tags:    

Similar News