42 வயது ஆட்டோ டிரைவருடன் தூக்கில் பிணமாக தொங்கிய 10-ம் வகுப்பு மாணவி- காரணம் என்ன? போலீசார் விசாரணை
- இதையடுத்து மாணவியை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள கோர்ட்டு உத்தரவிட்டது.
- ட்ரோன்கள் மூலமாகவும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது.
திருவனந்தபுரம்:
கர்நாடகா மாநிலம் பைவளிகே பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (வயது42). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணமாகவில்லை. இவரது பக்கத்து வீட்டில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் இருந்திருக்கிறார்.
பக்கத்து வீட்டுக்காரர் என்ற முறையில் மாணவியின் வீட்டுக்கு பிரதீப் அடிக்கடி சென்றிருக்கிறார். மேலும் மாணவியிடம் சகஜமாக பேசி பழகி வந்திருக்கிறார். சகோதர பாசம் என்ற அடிப்படையில் அவர் பழகியதால், அவர்களின் பழக்கத்தை யாரும் சந்தேகப்படவில்லை.
இந்தநிலையில் கடந்த மாதம்(பிப்ரவரி) 12-ந்தேதி வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர் அவளது செல்போனை தொடர்பு கொண்டனர். முதலில் அழைப்பு சென்ற நிலையில், சிறிது நேரத்திற்கு பிறகு செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்துவிட்டது.
மாணவி மாயமாகியிருந்த அதே வேளையில், பக்கத்து வீட்டில் வசித்து வந்த ஆட்டோ டிரைவரான பிரதீப்பையும் காணவில்லை. இந்தநிலையில் மாணவி, தனது உறவினர் ஒருவரின் செல்போனுக்கு ஆட்டோ டிரைவர் நெருக்கமாக இருக்கும் 50-க்கும் மேற்பட்ட புகைப்படங்களை அனுப்பினார்.
இதனால் மாணவி ஆட்டோ டிரைவருடன் சென்றிருப்பதை மாணவியின் குடும்பத்தினர், அறிந்தனர். அவர்கள் வீடு இருக்கக்கூடிய பகுதி கேரள மாநிலத்தை ஒட்டிய பகுதி என்பதால், மாணவி மாயமானது குறித்து கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கும்பலே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாணவி மற்றும் பிரதீப்பை தேடினர். ஆனால் அவர்கள் மாயமாகி பல நாட்கள் ஆகியும் போலீசார் கண்டுபிடிக்காததால், மாணவியின் குடும்பத்தினர் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து மாணவியை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் மாணவியை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர். மாணவி இருக்கும் இடத்தை கண்டறிய இருவரின் செல்போனை கண்காணித்தபடி இருந்தனர்.
அதில் அவர்களின் வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள வனப்பகுதியை காண்பித்தது. இதையடுத்து வனப்பகுதிக்குள் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ட்ரோன்கள் மூலமாகவும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது வனப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் மாணவி மற்றும் ஆட்டோ டிரைவர் ஆகிய இருவரும் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கேரள போலீசார் அந்த இடத்துக்கு சென்று இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் சம்பவ இடத்தில் தற்கொலை செய்துகொண்டதற்கான கடிதம் எதுவும் சிக்கவில்லை.
இருவரின் செல்போன்கள், கத்தி, சாக்லேட் ஆகியவையே கிடந்தன. மேலும் உடல் அழுகிய நிலையிலும் இல்லை. போலீசார் தீவிரமாக தேடுவதை அறிந்து இருவரும் தூக்குப்போட்டு உயிரை மாய்த்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாயமான 25 நாட்களுக்கு பிறகு 10-ம் வகுப்பு மாணவி, ஆட்டோ டிரைவருடன் காட்டுப்பகுதியில் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.