இந்தியா

ரூ.500 கோடி சொத்துக்களை டிராவல்ஸ் அதிபருக்கு எழுதி வைத்த ரத்தன் டாடா

Published On 2025-02-07 14:29 IST   |   Update On 2025-02-07 14:29:00 IST
  • ரத்தன் டாடா குடும்பத்தினருக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
  • ரத்தன் டாடாவுடன் தத்தா ஒரு வணிக பங்குதாரர் என்பதை விட அதிக நெருக்கமாக இருந்தார்.

புதுடெல்லி:

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு ரூ. 10 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துகள் உள்ளன. இதனை தன்னுடைய சகோதரர் ஜிம்மி டாடா மற்றும் தனது தாயின் மறுமணத்தின் மூலம் பிறந்த ஒன்றுவிட்ட சகோதரிகள் ஷிரீன், டீன்னா ஆகியோருக்கு கிடைக்கும்படி சொத்துக்களை உயில் எழுதி வைத்துள்ளார் ரத்தன் டாடா.

இந்த நிலையில் அவரது சொத்துக்களில் மூன்றில் ஒரு பங்கை அவரது தொழில் முறை பங்குதாரர் மோகினி மோகன் தத்தா என்பவருக்கு எழுதி வைத்துள்ளார். இந்த சொத்துக்களின் மதிப்பு ரூ.500 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.

இது ரத்தன் டாடா குடும்பத்தினருக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மோகினி மோகன் தத்தா ஜாம்ஷெட் பூரைச் சேர்ந்த டிராவல்ஸ் அதிபர் ஆவார். 80 வயது ஆகும் மோகினி மோகன் தத்தா 1960-ம் ஆண்டில் ஜாம்ஷெட் பூரில் ரத்தன் டாடாவை முதன்முதலில் சந்தித்தார். அப்போது அவர்களுக்கிடையே நட்பு உருவானது.

அப்போது மோகினி மோகன் தத்தாவுக்கு 24 வயது இருக்கும். இவர் சொந்தமாக டிராவல் ஏஜென்சி நிறுவனத்தை தொடங்கினார். இது 2013-ம் ஆண்டில் தாஜ் குழும ஹோட்டல்களின் ஒரு பிரிவான தாஜ் சர்வீசஸுடன் இணைக்கப்பட்டது. அவர்கள் வணிகத்தில் 80 சதவீத பங்குகளை வைத்திருந்தனர், மீதமுள்ள பங்கு டாடா நிறுவனத்திடம் இருந்தது.

பின்னர் டாடா கேபிடல் நிறுவனத்துக்கு கைமாறி பின்னர் தாமஸ் குக் (இந்தியா) நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. தற்போது டி.சி. டிராவல் சர்வீசஸாக செயல்படும் தத்தா, இயக்குநராகத் தொடர்கிறார். டாடா கேபிடல் உட்பட டாடா குழும நிறுவனங்களிலும் அவர் பங்குகளை வைத்திருக்கிறார்.

ரத்தன் டாடாவுடன் தத்தா ஒரு வணிக பங்குதாரர் என்பதை விட அதிக நெருக்கமாக இருந்தார். ரத்தன் டாடாவின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்தார். கிட்டத்தட்ட டாடாவின் வளர்ப்பு மகன் போலவே நெருக்கமாக இருந்ததாக தெரிகிறது. ஆனால் டாடா யாரையும் சட்டப்பூர்வமாக தத்தெடுக்கவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News