லீவு கிடைக்காததால் சக ஊழியர்களை கத்தியால் குத்திய நபர்.. சாலையில் ரத்தம் சொட்ட நடந்து சென்ற வீடியோ
- தோளில் ஒரு பையுடனும் கையில் ரத்த தோய்ந்த கத்தியுடனும் அவர் நடந்து சென்றார்.
- சக ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டு அது தகராறாக முற்றியது.
மேற்கு வங்கத்தை சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் விடுப்பு கிடைக்காததால் சக ஊழியர்கள் 4 பேரை கத்தியால் குத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட நபரின் பெயர் அமித் குமார் சர்க்கார். கொல்கத்தாவின் நியூடவுன் பகுதியில் அமைந்துள்ள கரிகாரி பவனில் தொழில்நுட்பக் கல்வித் துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார்.
அமித் குமார் சர்க்கார் நேற்று தனது சக ஊழியர்களை கத்தியால் குத்திவிட்டு, அதை கையில் ஏந்தியபடி ஊருக்குள் சுற்றித் திரிந்தார். தோளில் ஒரு பையுடனும் கையில் ரத்த தோய்ந்த கத்தியுடனும் அவர் நடந்து செல்வதை அவ்வழியாக சென்றோர் படம்பிடிக்க முயன்றனர்.
அவர்களையும் தன்னை விட்டு தள்ளி இருக்குமாறு அவர் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வேகமாக பரவி வருகிறது. தகவலின்பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.
விடுமுறை எடுப்பது தொடர்பாக தனது சக ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டு அது தகராறாக முற்றவே, அமித் குமார் அவர்களை கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
அவரால் கத்தியால் குத்தப்பட்ட ஜெய்தேப் சக்ரவர்த்தி, சாந்துனு சஹா, சர்தா லேட் மற்றும் ஷேக் சதாபு ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
அமித் குமாருக்கு விடுப்பு மறுக்கப்பட்டதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவருக்கு மனநலப் பிரச்சனைகள் இருப்பதாக போலீஸ் கருதுகிறது.