சிறுமியை வன்கொடுமை செய்த சாமியாருக்கு டெல்லி மெட்ரோவில் விளம்பர போஸ்டர்கள்.. சர்ச்சை!
- ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபு ஆயுள் தண்டனை பெற்றார்.
- டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் [DMRC-யின்] வெட்கக்கேடான செயல் என்று விமர்சித்தார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த பிரபல சாமியார் ஆசாராம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்பட பல இடங்களில் ஆசிரமம், அறக்கட்டளைகள் உள்ளன.
2013-ம் ஆண்டு ஜோத்பூரில் உள்ள ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 2018-ம் ஆண்டு ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் ஜோத்பூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் டெல்லி மெட்ரோ ரெயில் பெட்டிகளில் சாமியார் ஆசாராம் பாபுவின் உருவப்படம் கொண்ட விளம்பர ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விளம்பர போஸ்டர்களை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த வழக்கறிஞர் ஒருவர், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளின் கீழ் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளியின் விளம்பர போஸ்டர்களை மெட்ரோவில் காட்சிப்படுத்த அனுமதித்திருப்பது டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் [DMRC-யின்] வெட்கக்கேடான செயல் என்று விமர்சித்தார்.
இந்த பதிவு வைரலான நிலையில் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். விமர்சனங்களுக்கு பின் பதிலளித்த டெல்லி மெட்ரோ நிர்வாகம், மெட்ரோ வளாகத்திலிருந்து இந்த விளம்பரங்களை விரைவில் அகற்றுமாறு உரிமதாரருக்கு DMRC உடனடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.