உலகம்

கையும் களவுமாக சிக்கிய ரஷியா.. வட கொரிய வீரர்களை கைது செய்த உக்ரைன் - ஜெலன்ஸ்கி சொல்வது என்ன?

Published On 2025-01-12 10:50 IST   |   Update On 2025-01-12 10:51:00 IST
  • குர்ஸ்க் பகுதியில் வடகொரிய வீரர்களை உக்ரைனின் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
  • என்ன நடக்கிறது என்பது பற்றிய உண்மையை உலகம் அறிய வேண்டும்.

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் கடந்த 2022 பிப்ரவரி முதல் தீவிரமான போர் நடந்துவருகிறது. மேற்குலகின் நேட்டோ நாடுகளுடன் சேரும் உக்ரைன் உடைய முயற்சி, ரஷியாவுக்கு பாதுகாப்பு அச்சறுத்தல் என்று கூறி ரஷியா போர் தொடுத்த நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பி ரஷியாவுடன் மறைமுக போர் நடத்தி வருகிறது.

இந்நிலையில் ரஷியாவுக்கு ஆதரவாக வட கொரிய வீரர்கள் 12,000 பேர் அனுப்பி வைக்கப்பட்டதாக உக்ரைன், தென் கொரியா, அமெரிக்க நாடுகள் எச்சரித்தன. இடையில் போரில் வட கொரிய வீரர்கள் பாஷை புரியாமல் ரஷிய வீரர்களையே சுட்டது என பலவாறான தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் ரஷியாவில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள குர்ஸ்க் பகுதியில் இரண்டு வடகொரிய வீரர்களை உக்ரைனின் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, குர்ஸ்க் பகுதியில் வட கொரிய இராணுவ வீரர்களை நமது வீரர்கள் சிறைபிடித்துள்ளனர். காயமடைந்த இரண்டு வீரர்கள், கீவ் -க்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் இப்போது பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் உள்ளனர்.

 

இது எளிதான காரியமல்ல. உக்ரைனுக்கு எதிரான போரில் வட கொரியாவின் ஈடுபாட்டிற்கான எந்த ஆதாரத்தையும் விட்டுவைக்காமல் அழிக்க களத்தில் சண்டையிட்டு காயமடைந்த வட கொரிய வீரர்களை அவர்களே கொலை செய்வார்கள்.

 

இதை முறியடித்து இரண்டு வட கொரிய வீரர்களை எங்கள் படை சிறைபிடித்துள்ளது பாராட்டத்தக்கது. அனைத்து போர்க் கைதிகளையும் போலவே, இந்த இரண்டு வட கொரிய வீரர்களும் தேவையான மருத்துவ உதவியைப் பெறுகிறார்கள்.

பத்திரிகையாளர்கள் இந்தக் கைதிகளை அணுக அனுமதிக்குமாறு படையினருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். என்ன நடக்கிறது என்பது பற்றிய உண்மையை உலகம் அறிய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News