உலகம்

வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அரசியல் ரீதியானது - அரசு அறிக்கை

Published On 2025-01-12 14:04 IST   |   Update On 2025-01-12 14:05:00 IST
  • 1769 தாக்குதல் மற்றும் நாசவேலை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அறிக்கை கூறுகிறது.
  • 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 65 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மானவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. தொடர்ந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிளான இடைக்கால அரசு பொறுப்பேற்றது.

வங்கதேச மக்கள் தொகையில் 7.65 சதவீதம் உள்ள இந்து சிறுபான்மையினர் மீது தொடர் தாக்குதல்கள் நடைபெற தொடங்கியது.

 

இந்துக்களின் கோவில்கள் தாக்கப்பட்டன. துர்கா பூஜையின்போது இந்த சம்பவங்கள் அதிகம் அரங்கேறின. இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்துக்கள் மீதான வன்முறைக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே இந்துக்களின் போராட்டத்தைத் தூண்டியதாக இஸ்கான் மத அமைப்பை சேர்ந்த சின்மோய் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை, அரசியல் ரீதியானது என்றும் [மத] வகுப்புவாத ரீதியானது அல்ல என்று யூனுஸ் அரசு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக காவல்துறை தரவுகள் அந்த அறிக்கையில் மேற்கோள் கட்டப்பட்டுள்ளது.

 

 

இருப்பினும் இந்த தாக்குதல்களில் பல 'வகுப்புவாத ரீதியானவை' என்பதை அரசு ஒப்புக்கொண்டாலும் பெரும்பாலான தாக்குதல்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றே கூறப்பட்டுள்ளது.

மொத்த வன்முறை சம்பவங்களில், 1769  தாக்குதல் மற்றும் நாசவேலை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அறிக்கை கூறுகிறது.

கூற்றுக்களின் அடிப்படையில் இதுவரை 62 வழக்குகளில் காவல்துறையினர் விசாரணையின் அடிப்படையில் குறைந்தது 35 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

எவ்வாறாயினும், இதில் 1,234 சம்பவங்கள் அரசியல் காரணங்களுக்காகவே நடந்துள்ளன வகுப்புவாத சம்பவங்கள் குறைவு என்றும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

ஆகஸ்ட் 5 முதல் ஜனவரி 8, 2025 வரை 134 வகுப்புவாத வன்முறை சம்பவங்களை போலீசார் கண்டறிந்துள்ளனர். போலீஸ் அதிகாரிகளின் கூற்றுப்படி, 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 65 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

வகுப்புவாத வன்முறை தொடர்பான புகார்களை நேரடியாகப் பெறவும், சிறுபான்மை சமூகத்தினருடன் தொடர்பைப் பேணவும் காவல்துறை வாட்ஸ்அப் எண்ணையும் வெளியிட்டுள்ளது.

வகுப்புவாத வன்முறைகளில் தொடா்புடைய குற்றவாளிகளை கைது செய்யவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது என்று அரசு கூறுகிறது. 

Tags:    

Similar News